‘கலக்கப்போவது’ நிகழ்ச்சியில் தொடங்கி இன்று ‘காக்கி சட்டை’யில் கலக்கும் சிவகார்த்தி


‘கலக்கப்போவது’ நிகழ்ச்சியில் தொடங்கி இன்று ‘காக்கி சட்டை’யில் கலக்கும் சிவகார்த்தி

சின்னத்திரையில் தொடங்கிய சிவகார்த்தியின் கலைப்பயணம் இன்று பெரியதிரையில் தொடர்கிறது.  ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் தொடங்கி இன்று ‘காக்கி சட்டை’யில் கலக்கி கொண்டிருக்கிறார் இவர்.

விஜய் தொலைக்காட்சியில் சிறுசிறு நிகழ்ச்சியில் பங்கேற்று, பின்னர் அதே டிவியில் தொகுப்பாளராக உயர்ந்து, இன்று பெரிய திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  தன்னுடைய டைமிங் காமெடியால் ஒவ்வொரு இல்ல வரவேற்பறையிலும் ‘எங்க வீட்டு பிள்ளை’யாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் என்று சொன்னால் அது மிகையாகாது.

தொகுப்பாளராக பணிபுரிந்த இவரை ஹீரோவாக்கிட அழைத்து வந்தார் இயக்குனர் பாண்டிராஜ். அவரின் மெரினா படம் மூலம் பெரிய திரைக்கு வந்தார். 2012ம் ஆண்டு பெரிய திரைக்கு வந்த அவர் வந்த வேகத்தில் திரையுலக கடலில் ‘எதிர்நீச்சல்’ அடித்து தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஸ்ரீதிவ்யாவுடன் ஜோடி சேர்ந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் இவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகளும் பாடல் காட்சிகளும் நல்ல வரவேற்பை பெற்றன. படத்தில் ஒரு பாடலையும் பாடி பாடகராக உயர்ந்தார். அதன்பிறகு ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்து மான்கராத்தே படத்தில் நடிக்க, படமும் ஹிட்டானது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தயாரிப்பில், இவர் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள காக்கி சட்டை படம் பிப்ரவரி 27ஆம் தேதி ரிலீஸாகிறது. தற்போது தமிழ் திரையுலகை தாண்டி கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருடன் ‘வஜ்ரகயா’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்துள்ளார் இவர்.

தற்போது, சிவகார்த்திகேயன் பெரிய திரைக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

“சினிமாவில் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். பல சவால்கள் காத்திருக்கின்றன. ஒரு நடிகராக நான் வளர வேண்டும் என்பது எனக்கு தெரியும். உங்களால்தான் நான் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

சிவகார்த்தியின் கலைப்பயணத்தில் மேலும் வெற்றிகள் தொடர வாழ்த்துகிறோம்.