‘மாஸ்’ சூர்யாவுடன் மோதும் ‘புறம்போக்கு’ ஆர்யா டீம்


‘மாஸ்’ சூர்யாவுடன் மோதும் ‘புறம்போக்கு’ ஆர்யா டீம்

அஞ்சான் தோல்விக்கு பிறகு சூர்யா நடித்துவரும் படம் மாஸ். அதுபோல் நடிகர் கார்த்திக்கு பிரியாணி என்ற லாஸான படத்தை கொடுத்த வெங்கட்பிரபு தற்போது கார்த்தியின் அண்ணன் சூர்யாவுக்கு இணைந்து ஒரு மாஸான படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தங்களுக்கு ஒரு வெற்றி வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருவரும் தற்போது இணைந்துள்ளனர்.

மாஸ் படத்தில் சூர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இவருக்கு ஜோடியாக நயன்தாரா, ப்ரணித்தா என இருவரும் நடித்துள்ளனர்.  மேலும் இப்படத்தில் ஜெயராம், பிரேம்ஜி, கருணாஸ், ஸ்ரீமன், சமுத்திரக்கனி, ரியாஸ்கான், வித்யூலேகா ராமன் ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் வெளியீட்டு தேதியை இயக்குனர் வெங்கட்பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மே 15ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. சூர்யாவின் மாஸ் படம் வெளிவரும் இதே நாளில் ஆர்யாவின் புறம்போக்கு என்கிற பொதுவுடமை படமும் வெளியாகவுள்ளது.

’இயற்கை’,’ ஈ’, ’பேராண்மை’ படங்களுக்கு பிறகு இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தில் ஆர்யாவுடன், விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை யுடிவி நிறுவனமும் ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸூம் இணைந்து தயாரித்துள்ளது. இயக்குனர் ஜனநாதன் இப்படத்தில் புதிய இசையமைப்பாளர் வர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நிறைய பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வருவதால் இந்த கோடை வெயிலை வருகிற படங்கள் தணிக்கும் என்று நம்பலாம்.