ரஜினி படத் தயாரிப்பாளரும் நடிகர் வெங்கடேஷின் தந்தையுமான ராமநாயுடு மரணம்!


ரஜினி படத் தயாரிப்பாளரும் நடிகர் வெங்கடேஷின் தந்தையுமான ராமநாயுடு மரணம்!

ரஜினியின் தனிக்காட்டு ராஜா படத்தயாரிப்பாளரும், தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் தந்தையுமான டி.ராமநாயுடு இன்று மரணமடைந்தார்.  அவருக்கு வயது 78.

சாதாரண கூலித் தொழிலாளியாக தன் வாழ்க்கை தொடங்கிய இவர், சினிமா மீதான ஈடுபாடு காரணமாக ஒரு திரைப்பட ஏஜென்சி மூலம் இந்தத் தொழிலுக்கு வந்தார். படப்பிடிப்புக்கு வசதிகள் செய்து கொடுக்கும் ஏஜெண்டாக செயல்பட்டார்.  பிரபலங்களின் நட்பு கிடைக்கவே,  சுரேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

1964-ம் ஆண்டு ‘ராமடு பீமடு’ படத்தின் மூலமாக தயாரிப்பாளர் ஆனார். அப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை தயாரித்தார்.
150 க்கும் மேற்பட்ட படங்களை 13 மொழிகளில் தயாரித்திருக்கிறார். தனி ஒருவராக அதிகப் படங்களைத் தயாரித்தவர் என்ற சாதனைக்காக  இவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. இன்றும் மறக்கமுடியாத தமிழ் படமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை படத்தை தனது சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தவர் இவர்.

இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் என்ற வகையில் இந்திய அரசு ‘பத்ம பூஷண்’ மற்றும் ‘தாதா சாகிப் பால்கே’ விருது வழங்கி கவுரவித்தது.

அவர் உடல் நலக் குறைவால் நீண்ட காலம் கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.