சூர்யா, சிம்பு ரசிகர்களுக்கு மீண்டும் ஏஆர். ரஹ்மான் விருந்து!


சூர்யா, சிம்பு ரசிகர்களுக்கு மீண்டும் ஏஆர். ரஹ்மான் விருந்து!

முன்னணி நடிகர்கள் நடிக்காத படம் என்றாலும் ஏ.ஆர். ரஹ்மான் போன்ற ஜாம்பவான்கள் இருக்கும்போது அந்தப்படம் அனைவராலும் கவனிக்கப்படும். அதுவும் இவருடன் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இணைந்து விட்டால் அப்படத்தின் மார்கெட் வேல்யூ அதிகரிக்கும். இதனால் ஏ.ஆர். ரஹ்மானின் ஒவ்வொரு ஆல்பத்திற்காகவும் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். எனவே அவரது ரசிகர்களுக்காக அடுத்த டிசம்பர் மாதமே இரு படங்களை கொடுக்கவிருக்கிறாராம் ஏ.ஆர். ரஹ்மான்.

இந்நிலையில் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘24’ படத்தின் பாடல்களை அடுத்த மாதம் வெளியிட இருக்கின்றனர். இப்படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யா மேனன், சத்யன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை தனது 2டி நிறுவனத்தின் சார்பாக சூர்யாவே தயாரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிம்பு நடித்து கௌதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் பாடல்களும் வெளியாகவுள்ளதாம். இதில் சிம்புவின் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன் வெளியான சூர்யாவின் ‘சில்லுனு ஒரு காதல்’, சிம்புவின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஆகிய படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்ததும் அப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்ததும் இங்கே நினைவு கூறத்தக்கது.