சிம்பு ரசிகர்களுக்கு அவர் பிறந்தநாளில் ‘வாலு’ செய்தி


சிம்பு ரசிகர்களுக்கு அவர் பிறந்தநாளில் ‘வாலு’ செய்தி

ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து அஜித்தின் வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன் போன்ற படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தற்போது தயாரித்து வரும் படம் வாலு. சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்க விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.

சிம்புவுடன் ஹன்சிகா, சந்தானம், சூரி, விடிவி கணேஷ், தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம், ‘ஆடுகளம்’ நரேன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘வாலு’.

இப்படம் தொடங்கிய போது ஹன்சிகாவுடன் சிம்புவுக்கு காதல் ஏற்பட்டது. பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களின் காதல் முடிந்தாலும், ‘வாலு’ முடியாமல் வளர்ந்து கொண்டே போனது. அதாவது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போனது. சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ல் வெளியாகும் என முன்பு சொல்லப்பட்டது. ஆனால், படம் வெளியாகவில்லை. இந்நிலையில், மார்ச் 27ல் ‘வாலு’ படம் ரிலீஸ் ஆகும் என்று இயக்குனர் விஜய் சந்தர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளிவரும் படம் என்பதாலும் ஹன்சிகாவுடன் காதல் கொண்ட படம் என்பதாலும் ‘வாலு’விற்கு கணிசமான எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதுபோல இவர்கள் இணைந்த ‘வேட்டை மன்னன்’ படத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

இந்த ‘வாலு’வை தொடர்ந்து சிம்பு-நயன்தாராவின் ‘இது நம்ம ஆளு படம்’ ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.