‘ரஜினி அனுமதித்தால் யாரென்று காட்டுவோம்…’ கருணாஸ் அதிரடி..!


‘ரஜினி அனுமதித்தால் யாரென்று காட்டுவோம்…’ கருணாஸ் அதிரடி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களின் சார்பில் ‘மலரட்டும் மனிதநேயம்’ என்கிற பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றம் செய்திருந்தது.

விழாவில் ரஜினி மன்றத்தின் கொடியேற்றப்பட்டு மறைந்த இயக்குனர் கே. பாலசந்தரின் திருவுருவப் படத்தை ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் மற்றும் ‘கபாலி’ தயாரிப்பாளர் எஸ்.தாணு ஆகியோர் திறந்து வைத்தனர்.

நடிகர் பாபி சிம்ஹா பேசும் போது…

”’ஜிகர்தண்டா’ படம் பார்த்த ரஜினி என்னை பாராட்டினார். இப்படியொரு கதைன்னா நானே நடித்திருப்பேன் என்றும் சொன்னார். சூப்பர் ஸ்டார் என்றால் தலைவர் ரஜினி மட்டும்தான்” என்றார்.

நடிகர் கருணாகரன் பேசும்போது..

‘லிங்கா’ படப்பிடிப்பின போது ஒருமுறை ரஜினி புறப்பட்டு சென்றார். பின்னர் நடக்கமுடியாத ரசிகர் ஒருவருக்காக திரும்பிவந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் சென்றார். அதான் ரஜினியின் உண்மையான மனித நேயம்” என்றார்.

நடிகர் கருணாஸ் பேசும்போது…

“இது தமிழகமே எதிர்பார்க்கும் விழா. ரஜினி ரசிகர்களாக இருந்த நாங்கள் ஒன்றை அவரிடம் கேட்கிறோம். மற்றவர்கள் நம்மை கிண்டல் செய்கிறார்கள். நாம் யாரென்று மற்றவர்களுக்கு காட்ட அடையாளம் கேட்கிறோம். இதில் தயக்கம் இருந்தால் சைகை மட்டும் காட்டுங்கள். அதன்பின்னர் நாங்கள் யாரென்று காட்டுகிறோம்” என்றார்.

நடிகர் லொள்ளுசபா ஜீவா பேசும் போது, “இந்த விழா கூட்டப்பட்ட கூட்டமல்ல. தானாக வந்த கூட்டம். ‘கோச்சடையான்’ படத்தின் போது தலைவர் ரஜினியுடன் பழகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அவர் மாதிரியே நான் பேசியதை ரசித்தார்” என்றார்.

விழாவில் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் பேசும்போது…

ரஜினியை ‘டா’ போட்டு கூப்பிடும் நண்பன் நான்தான். ரஜினியும் நானும் 45 ஆண்டுகால நண்பர்கள். சினிமாவில் 40 ஆண்டுகளாக, அதுவும் 67 வயதில் ஹீரோவாக நடிப்பது மிகப்பெரிய சாதனை. அன்பு ரசிகர்களாகிய நீங்கள்தான் இதற்கெல்லாம் காரணம்.

சிங்கப்பூர் போன ரஜினி திரும்பிவரக் காரணம் நீங்கள்தான். ரஜினிக்கு உயிர் கொடுத்தது நீங்கள்தான். என்னை வாழவைக்கும் தெய்வங்கள் என்று ரஜினி சொல்வார். அது உண்மைதான். அவரை நீங்கள் கடவுளாக நினைக்கிறீர்கள். அவர் உங்களை கடவுளாக நினைக்கிறார். என்றார்.