“இப்போதுள்ள நடிகர்களை போல் நான் சம்பளம் வாங்கல..” பிலிம் நியூஸ் ஆனந்தன் புகழஞ்சலி நிகழ்ச்சியில் சிவகுமார் பேச்சு..!


“இப்போதுள்ள நடிகர்களை போல் நான் சம்பளம் வாங்கல..” பிலிம் நியூஸ் ஆனந்தன் புகழஞ்சலி நிகழ்ச்சியில் சிவகுமார் பேச்சு..!

தென்னிந்திய சினிமா உலகின் முதல் பிஆர்ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன், கடந்த மார்ச் 21ஆம் தேதி மறைந்தார். எனவே அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசியதாவது…

“தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் சரித்திரம் படைத்தவர்கள். அவர்களைப் போல் சரித்திரம் படைத்தவர்தான் பிலிம் நியூஸ் ஆனந்தன்.

அவர் 90 வயது வரை நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவர். இந்த நிகழ்ச்சியில் துக்கமோ வருத்தமோ படத் தேவையில்லை. ஏனென்றால் அவர் பூரணமான வாழ்க்கை வாழ்ந்தவர். எவருக்கும் அவர் போல வாழும் வாய்ப்பு கிடைக்காது.

தமிழில் வெளியான முதல் படம் ‘காளிதாஸ்’. அப்படம் 1931 அக்டோபர் 31இல் வந்தது. அந்தப் படம் முதல் 7000 படங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்திருந்தார். நள்ளிரவு போன் செய்து கேட்டாலும் தகவல் தருபவர். அவர் ஒரு சாந்தசொரூபி.

இப்போது உள்ள நடிகர்களை போல் நான் சம்பாதிக்கவில்லை. எனது 125 வது படத்தில்தான் நான் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினேன்.

என் 100 வது படம் வந்தபோது என்னுடைய 100 தயாரிப்பாளர்களையும் ஒரே மேடையில் அழைத்து எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது நன்றி தெரிவித்து ஷீல்டு கொடுத்தேன். இது போன்ற வித்தியாசமான யோசனையைச் சொன்னவரே அவர்தான்.

1974ஆம் ஆண்டு என் திருமணம் கோவையில் நடைபெற்றபோது இங்கிருந்து எல்லா பத்திரிகையாளர்களையும் கோயமுத்தூர் அழைத்துச் சென்று சிறப்பு செய்தவர் அவர்.

1980ஆம் ஆண்டிலிருந்து ப்ளஸ் டூவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறேன். அதற்கு காரணமும் அவர்தான்.

இவ்வாறு சிவகுமார் பேசினார்.

தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் பேசியதாவது…

இங்கு எல்லா தயாரிப்பாளர்களும் வந்திருக்க வேண்டும். சிலர் வராமல் போனது வருத்தம்தான். சிவாஜி முதல் சிவகார்த்திகேயன் வரை அனைத்து நடிகர்கள் பற்றிய தகவல் சேகரித்து வைத்தவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். அவர் பெயரில் பிலிம் சேம்பரில் ஒரு அருங்காட்சியகம் அமைத்து, அவரது சிலையை அங்கே வைக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் மேலும் நடிகர்கள் மன்சூரலிகான், ராகவா லாரன்ஸ்,பூவிலங்கு மோகன், பாடகர் கானாபாலா, ‘பெப்ஸி’ செல்வராஜ், இயக்குநர் சக்தி சிதம்பரம், பத்திரிகையாளர் நெல்லை பாரதி, தென்னிந்திய சினிமா பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் செயலாளர் பெரு. துளசி பழனிவேல், தலைவர் விஜயமுரளி, கௌரவத் தலைவர் நெல்லை சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பிலிம் நியூஸ் ஆனந்தனின் மனைவி, மகன் பத்திரிகை தொடர்பாளர் டைமண்ட்பாபு உள்ளிட்ட குடும்பத்தினருக்கு வந்திருந்தவர்கள் ஆறுதல் கூறினார்கள்.

Related