“எங்க வீட்டு வேலைக்காரனிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்…” அப்பா பற்றி சூர்யா (வீடியோ)


“எங்க வீட்டு வேலைக்காரனிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்…” அப்பா பற்றி சூர்யா (வீடியோ)

விசாரணைப் படத்திற்காக தேசிய விருது பெற்ற சமுத்திரக்கனி நடித்து இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் ‘அப்பா’.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாகவுள்ளார்.

இதன் முதற்கட்டமாக சூர்யா தன் அப்பா குறித்து பேசுவார் என்ற விளம்பரங்கள் வந்தன. தற்போது அதன் வீடியோ காட்சியினை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதில் தன் அப்பா நடிகர் சிவக்குமார் குறித்து, சூர்யா நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அதில் சிலவற்றை காண்போம்.

“எந்த ஒரு சூழ்நிலையிலும் எங்களை ஒரு நடிகனின் மகனாக அப்பா வளர்த்தது இல்லை. அவரும் எங்களிடத்தில் அவரை அப்படி காட்டிக் கொண்டது இல்லை.

ஒரு சிறிய கிராமத்தில் பத்தாம் வரை மட்டுமே படித்துள்ளார். அதன்பின் ஒரு நல்ல ஓவியராகி நடிகராக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டார்.

உன்னோட பெயரை மற்றவர்கள் ஞாபகம் வைச்கிறது பெரிய விஷயமல்ல. உன்னுடைய நல்ல பழக்க வழக்கங்களை மற்றவர்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளும்படி நாம நடந்துக்கனும்.

முக்கியமாக வாழ்க்கையில சில நல்ல விஷயங்களை கடைப்பிடிக்க சொல்வார்.

நீ ஒரு விஷயத்தை முடிவு பண்ணிட்டா, எதற்காகவும் யாருக்காகவும் அதை மாற்றிக் கொள்ளாதே அப்படி சொல்வார். எனக்கு அது ரொம்ப பிடிக்கும்.

அப்புறம் உடல் ஆரோக்கியத்தை பத்தி சொல்வாரு. எனக்கு ஆறு வயசு இருக்கும்போது அதிகாலை 4.30 மணிக்கு வலுக்கட்டாயமா எழுப்பி பீச்சுக்கு அழைச்சிட்டு போவார்.

நீ சூரியனை சிவப்பா பாத்திருக்கியா? பாருன்னு சொல்வாரு. வாக்கிங், ஜாக்கிங், யோகா எல்லாம் சொல்லி கொடுப்பாரு.

சுத்தமான ஓசோன் காற்றை சுவாசிக்க சொல்வாரு. இப்பவும் அவர் நைட் 9.30 மணிக்கு தூங்கி அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து வாக்கிங் போவாரு. இந்த முறையை எப்பவும் கடைப்பிடிக்க சொல்வாரு.

அதுபோல உனக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு எப்பவும் மரியாதை கொடுக்க சொல்வாரு. அவங்க நமக்காக வேலை பார்க்குறாங்க. கண்டிப்பா அவங்களை மதிக்கனும் சொல்வாரு.

ஒருமுறை எங்க வீட்டு சமையல்காரனை ஏதோ திட்டி விட்டேன். அவரிடம் மன்னிப்பு கேட்டால்தான் சாப்பாடு என்று சொன்னார். நானும் வெட்கத்தை விட்டு மன்னிப்பு கேட்டேன்.

அதுபோல யாரோட யாரையும் கம்பேர் பண்ணாதே என்பார். எல்லாருக்கும் போட்டி சேலன்ஞ்ச் இருக்கு. ஒவ்வொரு கொள்கை இருக்கு. ஒப்பீடு செய்தால், வாழ்க்கையில் நிம்மதி இருக்காது என்பார்.

எந்த வேலையா இருந்தாலும் யாரையும் எதிர்பார்க்காதே. நீயே செய் என்பார். அவரும் அதை கடைப்பிடிக்கிறார்.

ஒவ்வொரு ஐந்து வருடத்துக்கும் ஒருமுறை ஏதாச்சும் புதுசா எதையும் கற்றுக் கொள்ள சொல்வார். அப்போதான் நம்மள புதுப்பிச்சிக்க முடியும் சொல்வார்.

நான் அவரால் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். அவரைப்போல் நானும் நல்ல அப்பாவாக இருக்க முயற்சி செய்து வருகிறேன்”

என்று தன் அப்பா பற்றி கூறியிருக்கிறார் சூர்யா.