மீண்டும் கமல், த்ரிஷா ‘ஓர் இரவு’க்காக இணைகின்றனர்!


மீண்டும் கமல், த்ரிஷா ‘ஓர் இரவு’க்காக இணைகின்றனர்!

12 வருடங்களுக்கு மேலாக தமிழ் தென்னிந்திய சினிமாவை தன்னுடைய நடிப்பால் கலக்கி வரும் அழகு புயல் த்ரிஷா. சமீபத்தில் இவருக்கு தயாரிப்பாளர் வருண்மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. எனவே, த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் குறைந்து விடும் என்று நினைத்தனர் திரையுலகினர். ஆனால் நமது வானிலை அறிக்கை போல அதற்கு நேர்மாறாக த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.

தற்போது ஜெயம் ரவியுடன் ‘பூலோகம்’, ஜெயம் ரவி-அஞ்சலியுடன் ‘அப்பாடக்கரு’ மற்றும் ஓவியா, பூனம் பஜ்வா ஆகியோருடன் ‘போகி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்  த்ரிஷா. இதற்கிடையில் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் கமல்ஹாசனுடம் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் த்ரிஷா.

தற்போது கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்’ மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் பாபநாசம், விஸ்வரூபம் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில் புதிய படத்தில் கமல் நடிக்கவுள்ளார். இதில்தான் த்ரிஷா ஜோடியாக நடிப்பார் என செய்திகள் வந்துள்ளன. காதல், ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் கலந்த படமாக உருவாக்க உள்ள இப்படத்தை ‘மன்மதன் அம்பு’, ‘விஸ்வரூபம்’, ‘உத்தமவில்லன்’ உள்ளிட்ட படங்களில் கமலுடன் இணைந்து பணியாற்றிய ராஜேஷ் என்பவர் இயக்குவார் எனத் தெரிகிறது.

‘ஓர் இரவு’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை மொரீஷியஸ் தீவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் முக்கிய கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இப்படத்திற்கு கமலின் தற்போதைய ஆஸ்தான இசையமைப்பாளராக மாறியுள்ள ஜிப்ரான் இசையமைப்பார் எனத் தெரிகிறது.