ஐஸ்வர்யா தனுஷ் சொல்வதை ரஜினி ரசிகர்கள் கேட்பார்களா?


ஐஸ்வர்யா தனுஷ் சொல்வதை ரஜினி ரசிகர்கள் கேட்பார்களா?

ஒரு விஷயத்தை மூடி மறைத்திருக்கும் வரை மட்டுமே அதில் சுவாரஸ்யம் இருக்கும். அந்த விஷயத்தை வெளியே தெரியப்படுத்திவிட்டால் அதில் உள்ள சுவாரஸ்யம் குறைந்து விடும். இது தயாராகி வரும் படங்களுக்கு மிகப்பொருத்தமாக இருக்கும்.

ஒரு படம் தயாராகி வரும்போதே அப்படத்தின் காட்சிகள், புகைப்படங்கள் உள்ளிட்டவைகளின் தகவல்கள் வந்துவிட்டால் படம் வெளியாகும்போது ‘அட இவ்வளவுதானா…’ என்ற சலிப்பு ஏற்படுவது சகஜமே. எனவே முன்னணி நடிகர்களின் படம் பற்றிய தகவல்களை வெளியே விடாமல் ரகசியம் காத்து வந்தனர்.

ஆனால் தற்போது உருவாகி வரும் ரஜினியின் ’கபாலி’ படத்தின் ஒவ்வொரு புகைப்படங்களும் இணையத்தில் அடுத்த நொடியே வெளியாகி விடுகிறது. அதுவும் மலேசியா சென்ற பின் ரஜினியின் ஒவ்வொரு அசைவுகளையும் படம்பிடித்து நெட்டில் பதிவேற்றி விடுகின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் ‘கபாலி’ படத்தின் புகைப்படங்களை இணையதளங்களில் பரப்ப வேண்டாம் என்று ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவரைப் போலவே ‘கபாலி’ படக்குழுவும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் “ரஜினி சாருடன் நீங்கள் எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் இப்போதைக்கு பதிவேற்ற வேண்டாம். ‘கபாலி’ படம் வந்த பிறகு அப்படங்கள் வெளியானால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும்.  இப்போதே பகிர்ந்தால் ரஜினி சாரின் தோற்றம் மற்றும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அது குறைத்துவிடும்’ என்று கூறியுள்ளனர்.