அண்ணன் தம்பிக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!


அண்ணன் தம்பிக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ படம் பலருக்கு வாழ்வளித்தது என்று சொன்னால் அது மிகையல்ல. ரஞ்சித் இன்று ரஜினியின் ‘கபாலி’ படத்தை இயக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார். தினேஷின் அடையாளமாக மாறிவிட்டது ‘அட்டக்கத்தி’ என்ற சொல். மேலும் கலையரசன், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் அப்படம் மூலம் பளிச்சிட்டுள்ளனர்.

இந்நிலையில் ‘திருடன் போலீஸ்’, ‘ரம்மி’, ‘காக்கா முட்டை’ படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் ‘காக்கா முட்டை’ இவருக்கு இந்தியளவில் முகவரியை பெற்றுத் தந்தது. இவரின் நடிப்பில் உருவான ‘இடம் பொருள் ஏவல்’ தயாராகி கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது குஷ்பு தயாரிக்கும் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘தீபாவளி துப்பாக்கி’, ‘குற்றமே தண்டனை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ‘என்னென்றும் புன்னகை’ அஹ்மது இயக்கத்தில் உதயநிதி ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர ‘ஈரம்’, ‘வல்லினம்’ படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கும் ”ஆறாது சினம்” படத்தில் அருள்நிதி ஜோடியாக நடிக்கிறாராம்.

ஒரே நேரத்தில் அண்ணன் உதயநிதி மற்றும் தம்பி அருள்நிதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பது குறிப்பிடத்தக்கது.