அஜித், விஜய் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் – வைரமுத்து


அஜித், விஜய் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் – வைரமுத்து

‘பாண்டியநாடு’ படத்தில் இணைந்த விஷால்-சுசீந்திரன் வெற்றிக் கூட்டணி மீண்டும் ‘பாயும் புலி’ படத்திற்காக இணைந்துள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால், சூரி, சமுத்திரக்கனி, ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய வேந்தர் மூவிஸ் தயாரித்துள்ளது.

இதன் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இமான் பேசும்போது… விஷால் நடித்துள்ள ‘பாயும் புலி’ பாடல்கள் அருமையாக வந்துள்ளது. வைரமுத்து அழகான வரிகளை கொடுத்து பாடல்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். ‘புலி’யாக இருந்தாலும் ‘பாயும் புலி’யாக இருந்தாலும் அந்த காட்டுக்கு வைரமுத்துதான் ராஜா” என்றார்.

பின்னர் கவிஞர் வைரமுத்து பேசினார். அவர் கூறியதாவது… “சுசீந்திரன் எனக்கு ‘பாயும் புலி’ படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்தார். நிறைய அருமையான விஷயங்கள் படத்தில் உள்ளது. இப்பட வெளிவந்த பிறகு விஷால் மேலும் உயரத்துக்கு சென்றுவிடுவார். சுசீந்திரன் சிறந்த, தரமான படங்களைத்தான் இதுவரை கொடுத்துள்ளார். அவர் படங்களுக்கு மினிமம் கியாரண்டி உள்ளது.

அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நாயகர்கள் தரமான, சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடிக்கவேண்டும். அதற்கு அவர்கள் சுசீந்திரனை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதனை அவர்களிடம் பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.

இவ்விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புகைப்படம் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் பூங்கொத்து கொடுக்காமல் அப்துல் கலாம் அவர்கள் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ புத்தகம் வழங்கப்பட்டது.