‘பாட்ஷா-2’வில் அஜித்? சுரேஷ்கிருஷ்ணா சொல்வது என்ன?


‘பாட்ஷா-2’வில் அஜித்? சுரேஷ்கிருஷ்ணா சொல்வது என்ன?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய படங்களில் அவருக்கு மிகவும் பிடித்த படங்களில் அவர் முக்கியமாக சொல்லுவது… ‘முள்ளும் மலரும்’, ‘ராகவேந்திரா’, ‘பாட்ஷா’, ‘படையப்பா’, ‘எந்திரன்’ உள்ளிட்ட படங்களைத்தான்.

இதில் ‘பாட்ஷா’ ரஜினியால் மட்டுமல்ல தமிழக மக்களாலும் மறக்கமுடியாத படம். சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய மாபெரும் சூப்பர் ஹிட் வெற்றிப்படம் இது. 1995ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். தற்போதும் இப்படம் எந்த டிவியில் ஒளிப்பரப்பப்பட்டாலும் படம் முழுவதையும் பார்க்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் ‘தல 56’ படத்தை முடித்துவிட்டு கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்றுமுதல் மீடியாவை பரபரப்புள்ளாகிய விஷயம் ‘பாட்ஷா-2’வில் அஜித் நடிக்கிறார் என்பதுதான். ரஜினி நடிக்க மறுத்துவிட்டதாகவும் எனவே சுரேஷ்கிருஷ்ணா அஜித்தை அணுகியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவே கூறியதாவது… “நான் இயக்கிய ரஜினி சார் நடித்த ‘பாட்ஷா’ படம் தொடர்பான செய்திகள் 20 வருடம் கழித்து வரும்போது மகிழ்ச்சி கொள்கிறேன். இச்செய்தி ஒவ்வொரு முறை வரும்போதும் மகிழ்ச்சிதான். ஆனால் இது உண்மையில்லை. அப்படி அஜித் நடித்தால் இயக்க நான் எப்பவும் தயார்தான்” என்று தெரிவித்தார்.