அஜித் அளித்த ஆனந்தபரிசு – பார்வதி நாயர் பரவசம்


அஜித் அளித்த ஆனந்தபரிசு – பார்வதி நாயர் பரவசம்

என்னை அறிந்தால் படம் ரிலீஸ் தேதி அருகில் வரவர… அது தொடர்பான செய்திகளும் வந்து கொண்டே இருக்கின்றன. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்தின் ஆக்‌ஷன் படமான ‘என்னை அறிந்தால்’ படம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப்படத்தில் தன்னுடன் நடித்த நாயகி பார்வதி நாயரின் நடிப்பைப் பாராட்டி, அஜித் எடுத்த புகைப்படத்தை அவருக்கு ஆளுயரப் புகைப்படமாக பரிசாக அளித்திருக்கிறார். இதனால் மிகுந்த பரவசத்தில் உள்ளார் பார்வதி நாயர். இது குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசியதாவது…

“என்னை அறிந்தால் படம்தான், இதுநாள் வரை நான் பணியாற்றிய படங்களிலேயே நெருக்கமாக உணர்ந்த படம். செட்டில் உள்ள அனைவரும் ஒரு குடும்பத்தைப் போல இருந்தோம். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் என்னைப் பரவசப்படுத்தியது. கடைசி நாளன்று, அங்கிருந்து கிளம்பவே மனதில்லை.

மேலும், அஜித் அவர்களுடன் பணியாற்றியது மறக்கமுடியாத ஓர் இனிய அனுபவம். அவருக்கு ஷூட்டிங் இடைவேளைகளில் புகைப்படம் எடுக்கப் பிடிக்கும். எனக்கே தெரியாமல் என்னை புகைப்படம் எடுத்திருக்கிறார். பின் அதை ப்ளாக் அண்ட் ஒயிட் புகைப்படமாகப் மாற்றி, ஃபிரேம் போட்டு எனக்குப் பரிசாக அளித்தார். இது படத்தில் என்னுடைய உழைப்பைப் பார்த்து அவர் அளித்த விருதாக நினைக்கிறேன்” என்றார்.

தற்போது உலக நாயகன் கமல்ஹாசனோடு உத்தமவில்லன் படத்தில் நடித்து வருகிறார் பார்வதி நாயர் என்பது குறிப்பிடத்தக்கது.