ஒரே நாளில் அனுஷ்காவின் இரண்டு படங்கள்!


ஒரே நாளில் அனுஷ்காவின் இரண்டு படங்கள்!

தற்போதுள்ள நடிகைளில் எந்த ஒரு நடிகைக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு அனுஷ்காவுக்கு உண்டு. இவர் நடித்து வரும் படங்களில் இவரை பிரதானப்படுத்தியே கதை உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வந்த ‘அருந்ததி’ படத்தை அதற்கு உதாரணமாக சொல்லலாம். தற்போது வரவிருக்கும் ‘ருத்ரமாதேவி’யும் அப்படியான ஒரு படமே. பதினைத்து வருடங்களுக்கு முன்பு லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி படங்களுக்கு அப்படியொரு ஒரு பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வருகிற அக்டோபர் 9ஆம் தேதி இவரது நடிப்பில் இரண்டு படங்கள் அன்றைய தினமே வெளியாகவுள்ளது. ‘பாகுபலி’ போலவே அனுஷ்கா நடித்த சரித்திர படமான ‘ருத்ரமாதேவி’ அக்டோபர் 9ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. குணசேகர் இயக்கியுள்ள இப்படத்தை தமிழகத்தில் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இத்துடன் அனுஷ்காவின் ‘இஞ்சி இடுப்பழகி’ படமும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஆர்யா, ஊர்வசி, சோனால் செளகான், சிறப்பு தோற்றத்தில் நாகார்ஜூனா ஆகியோர் நடித்திருந்தாலும் இப்படமும் அனுஷ்காவை பிரதானப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக எந்த நடிகையும் செய்யாத ஒரு விஷயத்தை துணிச்சலாக செய்தார். இதற்காக இவர் தனது உடல் எடையில் 20 கிலோவை கூட்டி பின்னர் குறைத்தும் நடித்துள்ளார்.

பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசை அமைத்த மரகதமணி இசை அமைத்துள்ளார். பிவிபி சினிமா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

எனவே, இந்த இருபடங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் அனுஷ்கா டபுளாக வருவதால் இவரது ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர்.