லிம்கா சாதனையில் ‘அரண்மனை2’ பட அம்மன் சிலை!


லிம்கா சாதனையில் ‘அரண்மனை2’ பட அம்மன் சிலை!

சுந்தர் சி, வினய், சந்தானம், ஆண்ட்ரியா, ஹன்சிகா, லட்சுமி ராய் நடித்த ‘அரண்மனை’ படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி.

இப்படத்தின் பாடல் காட்சிக்காக பிரம்மாண்ட  அம்மன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டது. 103 அடி நீளமும், 50 அடி உயரமும் கொண்ட இந்த அம்மன் சிலையை கலை இயக்குனர் குருராஜ் என்பவர் உருவாக்கினார். இதைவிட பெரிய பெரிய சிலைகள் இருந்தாலும் சினிமாவுக்காக உருவாக்கப்பட்ட பெரிய சிலை இதுதான். எனவே இந்த அம்மன் சிலை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது. இதுகுறித்து கலை இயக்குனர் குருராஜ் கூறியதாவது…

“இப்படத்தில் பக்தி பாடல் ஒன்று இடம் பெறுகிறது. ஆதி இசையமைத்துள்ள அப்பாடல் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறுகிறது. முதலில் இந்த அம்மன் சிலை கிராபிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதில் யதார்த்தம் இருக்காது என்பதால் நிஜமாகவே உருவாக்க முடிவு செய்தோம்.

எனவே அதன்படி அம்மன் சிலையை வடிவமைப்பவர்கள் எப்படி செய்வார்களோ அதுபோல் நாங்களும் முறைப்படி விரதம் இருந்து உருவாக்கினோம். இந்த சிலையை முடிக்க ஒன்றரை மாதங்கள் ஆனது. ப்ளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் பல்வேறு விதமான பொருட்களை கொண்டு சிலையை உருவாக்கினோம்” என்றார்.

இப்படத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி, ராதாரவி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஹிப்ஆப் தமிழா ஆதி இசையமைக்க யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். குஷ்பு இப்படத்தை தயாரிக்கிறார்.