‘அசால்ட் சேது’ பாபி சிம்ஹாவின் ‘அசால்ட் புரடொக்ஷன்ஸ்’


‘அசால்ட் சேது’ பாபி சிம்ஹாவின் ‘அசால்ட் புரடொக்ஷன்ஸ்’

‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘நேரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ‘ஜிகர்தண்டா’ படத்தின் பெரிய வெற்றி பாபி சிம்ஹாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இப்படத்தில் இவரின் அசால்ட்டான நடிப்பு இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

இந்த புகழைத் தொடர்ந்து தற்போது அரைடஜன் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் ரீமேக்கான ‘அர்ஜூன், திவ்யா மற்றும் கார்த்திக்’, கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’, ‘மசாலா படம்’, ‘உறுமீன்’, ‘கவலை வேண்டாம்’, ‘பாம்புச்சட்டை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மற்றொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்திற்கு ‘வல்லவனுக்கு வல்லவன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதே பெயரில் ஜெமினிகணேசன் நடித்த படம் 1965ஆம் ஆண்டு வெளியானது தாங்கள் அறிந்ததே. தற்போது இப்பெயரில் உருவாகும் படத்தின் மூலம் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுக்கிறார் பாபி சிம்ஹா. இந்நிறுவனத்திற்கு ‘அசால்ட் புரடொக்ஷன்ஸ்’ என பெயரிட்டுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ஷிவ்தா நாயர் மற்றும் பூஜா தேவ்ரியா என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.

பாபிசிம்ஹாவுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்த ‘ஜிகர்தண்டா’ படத்தில் கேரக்டர் பெயர் ‘அசால்ட் சேது’ என்பதால் அதே பெயரில் தன் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயரிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.