நஷ்டத்தை சந்திக்கும் ‘பாகுபலி’; கலங்கும் விநியோகஸ்தர்கள்!


நஷ்டத்தை சந்திக்கும் ‘பாகுபலி’; கலங்கும் விநியோகஸ்தர்கள்!

மொழி கடந்து, மாநிலம் கடந்து இந்திய திரையுலகமே எதிர்பார்த்த படம் ‘பாகுபலி’. இப்படம் நேற்று (ஜூலை 10ஆம் தேதி) உலகம்முழுவதும் வெளியானது. கதையில் புதுமை இல்லை என ஒருசில கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ரசிகர்களை  கவர்ந்து சாதனை புரிந்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில், நிவின்பாலி நடித்த ‘பிரேமம்’ படத்தின் சென்சாருக்கு அனுப்பப்பட்ட காபி திருடப்பட்டு இணையம் மற்றும்டிவிடிக்களாக வெளியானது. இதுபோன்ற செயல்களால் தியேட்டர் உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறி ஸ்ட்ரைக் செய்து வருகின்றனர். இதை தடுக்க கேரள அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேரளாவில் உள்ள 400க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. ஆனால் ஒருசில தியேட்டர்கள் மட்டும் இயங்கின.

இதனால் கேரளாவில் வெளியான ‘பாகுபலி’ பெரும் நஷ்டத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கலங்கியுள்ளனர். தியேட்டர் ஸ்ட்ரைக் வாபஸ் வாங்கும் வரை இந்த நிலைமை என்பதால் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.

ராஜமௌலி இயக்கத்தில் உருவான ‘நான் ஈ’, ‘பாகுபலி’ ஆகிய படங்கள் நேரடி மலையாள படங்களாக கேரளாவில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.