என்னையும் ‘அது’ மாதிரி நினைச்சுட்டாங்க – ‘பாம்பு சட்டை’ பானு


என்னையும் ‘அது’ மாதிரி நினைச்சுட்டாங்க – ‘பாம்பு சட்டை’ பானு

‘தாமிரபரணி’ என்ற தமிழ் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை பானு. இடையே நிறைய மலையாள படங்களில் நடித்து வந்தாலும் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ‘அழகர் மலை’, ‘பொன்னர் சங்கர்’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது கவுண்டமணியுடன் ‘வாய்மை’ படத்திலும், சந்தானத்துடன் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

‘ஜிகர்தண்டா’ படத்தில் வில்லனாக நடித்து தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா தற்போது ’பாம்பு சட்டை’ படத்தில் தனி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பானுவும் நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு பிரபல ஜுவல்லரி கடையில் நடைபெற்றது. காட்சி யதார்த்தமாக வரவேண்டும் என எண்ணிய இயக்குனர் ஒரு படப்பிடிப்பு நடைபெறுவது தெரியாத வண்ணம் கேமராவை மறைவாக வைத்து படமாக்கினார். அந்த ஜுவல்லரி கடை பணிப்பெண்களைப் போல நடிகை பானுவையும் உடையணிந்து நிற்க வைத்துவிட்டாராம்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பானுவை அடையாளம் தெரியாமல் நகை டிசைன்களை காட்டச் சொன்னார்களாம். காட்சியும் நன்றாக வந்துள்ளதால் படப்பிடிப்பு குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வித்தியாசமான காட்சி குறித்து பானுவிடம் கேட்டபோது…

“ஜுவல்லரி கடை பணிப் பெண்களை போல் நான் உடை அணிந்து நார்மலாக இருந்ததால் கடையின் கஸ்டமர்கள் என்னையும் அது மாதிரி நினைச்சுட்டாங்க. காட்சி நன்றாக வரவேண்டும் என்பதால் அது போல செய்தோம். இப்போது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.