ரஜினி படத்தலைப்பில் பாபி சிம்ஹா-ஐஸ்வர்யா!


ரஜினி படத்தலைப்பில் பாபி சிம்ஹா-ஐஸ்வர்யா!

சினிமாவில் நுழையும் ஹீரோயின் என்றால் ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பார்கள். இயக்குனர் என்றால் அவரை ஒரு படத்திலாவது இயக்க வேண்டும் என்பார்கள். ஹீரோக்கள் ரஜினி போல ஆகவேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அது நடக்கக் கூடிய காரியமா என்ன? ரஜினி ஸ்டைல்லா சொன்ன…. ‘கண்ணா இது அன்பால தானா சேர்ந்த கூட்டம்…’ சரி இப்போ நம்ம மேட்டருக்கு வருவோம்.

சரி நம்மால் ரஜினியாகத்தான் ஆக முடியாது… ஆனா அவரின் படத்தை ரீமேக் செய்வது… அட்லீஸ்ட் அவர் படத்தின் தலைப்பை நாம் பயன்படுத்திக் கொள்வது என தீர்மானித்து விட்டனர் தமிழ் திரையுலகினர்.

ரஜினியின் ‘பில்லா’, ‘முரட்டுக்காளை’, ‘மாப்பிள்ளை’ உள்ளிட்ட படங்கள் ரீமேக் செய்யப்பட்டன. பின்னர் ‘பொல்லாதவன்’, ‘படிக்காதவன்’, ‘தீ’, ‘நான் மகான் அல்ல’, ‘பாயும் புலி’ உள்ளிட்ட படங்களுக்கு ரஜினியின் படத்தலைப்பே வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ‘வீரா’ என்ற படத்தலைப்பும் புதிய படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘வீரா’ படத்தில் ரஜினியுடன் மீனா, ரோஜா, செந்தில், ஜனகராஜ், லிவிங்ஸ்ட்ன் உள்ளிட்டோர் நடிக்க சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

தற்போது இந்த புதிய ‘வீரா’-வில் பாபி சிம்ஹா நாயகனாக நடிக்க, நாயகியாக அறிமுக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். பால சரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபல எழுத்தாளர் பாக்கியம் சங்கர் கதை, திரைக்கதையுடன் வசனம் எழுத புதிய இயக்குனர் K.ராஜாராமன் இயக்குகிறார்.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இவர் தற்போது பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ், நிகில் கல்ராணி நடிக்கும் ‘கோ-2’ படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.