சூர்யாவுக்கு போட்டியாக உருவாகும் பாபி சிம்ஹா!


சூர்யாவுக்கு போட்டியாக உருவாகும் பாபி சிம்ஹா!

தற்போதைய தமிழ் சினிமாவில் எந்த ஒரு முன்னணி நடிகரும் அதிகபட்சம் மூன்று படங்களை தவிர வேறு எந்தப் படங்களிலும் கமிட் ஆகவில்லை. ஆனால் சூர்யா கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ஹைக்கூ’ படத்தில் நடித்துள்ளார். இதன் புதிய பெயர் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து விக்ரம்குமார் இயக்கத்தில் சமந்தாவுடன் ’24’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பின்னர் ஹரியின் ‘சிங்கம் 3′, லிங்குசாமி தயாரிக்கும் ‘சதுரங்க வேட்டை-2′, மற்றும் ரஞ்சித் இயக்கவிருக்கும் புதிய படம், பிரபல தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார் சூர்யா.

இவரைப்போலவே நடிகர் பாபி சிம்ஹாவும் தன் கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார். இவர் தற்போது ‘பாம்பு சட்டை’, ‘உறுமீன்’, ‘கோ 2’, ‘வீரா’, ‘மெட்ரோ’ என பிஸியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இன்னும் இரண்டு புதிய படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது…

“தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறேன். ஜிகர்தண்டா படத்தில் நடிக்காமல் இருந்தால் தற்போது இந்த முன்னேற்றம் இருந்திருக்காது. ஆனால் அதற்காக முயற்சியை விடாமல் ஒரு நடிகனாக இன்னும் தேடல் இருந்திருக்கும்.

தற்போது நடித்து வரும் ‘உறுமீன்’ ஆக்ஷன் த்ரில்லர் படம். படத்தின் இயக்குனர் சக்திவேலும் நானும் 7 வருட நெருங்கிய நண்பர்கள். நம் கண்முன் நடக்கும் விஷயங்கள், பேப்பரில் படிக்கும் சம்பவங்கள் ஆகியவற்றை எல்லாம் கலந்து இந்து சமூகத்திற்கு ஒரு வலிமையான கருத்தை சொல்லியிருக்கிறோம்.

நிறைய படங்களில் நடித்து வந்தாலும் படம் வெளியீடு தள்ளிக் கொண்டே போகிறது. படம் வெளிவருவது என் கையில் இல்லை. விரைவில் ஒவ்வொன்றாக வெளியாகும். கதை பிடித்திருந்தால் எந்த வேடம் என்றாலும் நடிப்பேன். என் திறமையை அதில் நிரூபிப்பேன்.

முன்பெல்லாம் சென்னையில் வெளியில் சென்றால் யாரும் கண்டுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இப்போ என்னைப் பார்ப்போர் என்னிடம் போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். சில சமயம் தொந்தரவாக இருந்தாலும் பல நேரங்களில் “இதற்கு தானே ஆசைப்பட்டாய் சிம்ஹா” என்று நினைத்து கொள்வேன். கோயம்புத்தூரில் இருந்து எதற்காக சென்னை வந்தேனோ அது நிறைவேறி உள்ளது. அதுவே சந்தோஷம்தான்.

இவ்வாறு பாபி சிம்ஹா கூறினார்.