வரலட்சுமியுடன் இணைந்த பாபி சிம்ஹா!


வரலட்சுமியுடன் இணைந்த பாபி சிம்ஹா!

தமிழில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ மற்றும் ‘கல்யாண சமையல் சாதம்’ உள்ளிட்ட படங்களையும் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ என்ற படத்தையும் இயக்கியவர் அருண் வைத்தியநாதன். தமிழில் இருபடங்களையும் இவரே தயாரித்திருந்தார். சீர்காழியைச் சேர்ந்த இவர் தற்போது மீண்டும் தமிழ் படத்தை இயக்கவுள்ளார்.

திரில்லர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை ‘பேஷன் பிலிம் பேக்டரி’ பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் அர்ஜுன் மெயின் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். அருண் வைத்தியநாதனின் மூன்று படங்களிலும் பிரசன்னா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களுடன் வைபவ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இவர்கள் மட்டுமில்லாமல் இன்னும் பல முன்னணி நடிகர்களும் இணையவிருக்கிறார்களாம். இப்படம் ‘மல்டி-ஸ்டார்’ திரைப்படமாக உருவாக இருக்கிறது. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். நவீன் இசையமைக்கிறார். சதீஷ் மற்றும் சூர்யா படத்தொகுப்பை கவனிக்கின்றனர்.