செலவை கட்டுப்படுத்த ரஜினி, அஜித், விஜய்யின் சம்பளம் குறைப்பு!


செலவை கட்டுப்படுத்த ரஜினி, அஜித், விஜய்யின் சம்பளம் குறைப்பு!

முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஹீரோக்களின் சம்பளத்திற்கே பெரிய தொகையை முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் படம் லாபம் அடையும் போது மகிழ்ச்சி கொள்வதும் நஷ்டம் அடையும்போது வருத்தம் அடைந்து வருவதும் தயாரிப்பாளர்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பெரும்பாலான படங்கள் நஷ்டம் அடைவதால் திரைப்படக் கூட்டுக் குழுவை கூட்டி இதுகுறித்து ஆலோசிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கு முக்கிய காரணமாக தற்போது கருதப்படுபவை மூன்று காரணங்களே. அவை… 1) கேளிக்கை வரி விலக்கு குறித்து ஐகோர்ட் உத்தரவு 2) தியேட்டர் டிக்கெட் கட்டணம் பிரச்சினை மற்றும் 3) நடிகர்களின் அதிக சம்பளம்.

இதனிடையில் கேளிக்கை வரி விலக்கின் பலன் முழுமையாக மக்களை சென்றடைய புதிய உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்தது. இதனால் வரிவிலக்கு பெற்ற படங்களுக்கு கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்பது முடிவானது. இதுவரை மக்களிடம் ரூ.120 டிக்கெட் கட்டணத்தை வசூலித்த தியேட்டர்கள் இனிமேல் ரூ.85 மட்டுமே வசூலிக்க முடியும். இந்த உத்தரவு திரைப்படத் தயாரிப்பாளர்களையும் தியேட்டர் அதிபர்களையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

எனவே, தயாரிப்பாளர்கள், தங்கள் படத்தயாரிப்பு செலவை குறைக்க முன்வந்துள்ளனர். இதனால் விரைவில் இதற்கான கூட்டம் நடைபெறும் எனத் தெரிய வந்துள்ளது.

ஒரு படம் நஷ்டம் அடைந்தால் அப்படத்தின் ஹீரோ தன்னுடைய சம்பளத்தில் இருந்து 20% தொகையை திருப்பித்தரவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கூறிவந்தனர். அது இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. எனவே விரைவில் நடைபெற உள்ள கூட்டுக்குழுவில் அது விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.