எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வின்சென்ட் மறைந்தார்!


எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வின்சென்ட் மறைந்தார்!

மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் போன்ற சாதனையாளர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஏ. வின்சென்ட் இன்று காலமானார்.

சண்டி ராணி என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழ், இந்தி உட்பட 70க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.  எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண், சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் உத்தம புத்திரன், கல்யாணப் பரிசு, தேன் நிலவு, நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை தன் ஒளிப்பதிவின் மூலம் பேச வைத்தவர் இவர். ஸ்ரீதர் இயக்கிய பெரும்பாலான படங்கள் இவரது ஒளிப்பதிவில் உருவானதுதான்.

இவைமட்டுமில்லாமல் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் வின்சென்ட். 1997ஆம் ஆண்டில் அன்னமய்யா என்ற தெலுங்குப் படத்துக்கு இறுதியாக ஒளிப்பதிவு செய்தார். பிரேம் நகர் என்ற இந்தி படத்திற்காக பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார். 2003ஆம் ஆண்டு இந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் இவருக்கு  உறுப்பினர் பதவி கொடுத்து கௌரவித்தது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வின்சென்ட் இன்று மரணமடைந்தார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு நடிகர் மம்மூட்டி உள்ளிட்ட தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளர்கள் ஜெயனன் வின்சென்ட் மற்றும் அஜயன் வின்சென்ட் இவரது மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.