உலகநாயகனை உரசிப்பார்க்கும் தனுஷ்-சிவகார்த்திகேயன்!


உலகநாயகனை உரசிப்பார்க்கும் தனுஷ்-சிவகார்த்திகேயன்!

‘உத்தமவில்லன்’ படத்தை தொடர்ந்து ‘த்ரிஷ்யம்’ ரீமேக் படமான ‘பாபநாசம்’ படத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலர் தாய்மார்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மோகன்லால் – மீனா நடித்த ‘த்ரிஷ்யம்’ மலையாள திரையுலகில் பெரிய வெற்றியைக் கண்டது. வெளியான அன்றைய தினமே இப்படத்தின் டிவிடி விற்பனை புதிய சாதனையை படைத்தது. அதுபோல திரையரங்களிலும் பெரும் வசூலை குவித்தது.

தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மொழிகளிலும் ஹிட்டடித்தது. தெலுங்கில் ஸ்ரீப்ரியா இயக்க வெங்கடேஷ் – மீனா ஜோடியாக நடித்திருந்தனர். கன்னடத்தில் பி.வாசு இயக்க ரவிச்சந்திரன் – நவ்யா நாயர் ஜோடியாக நடித்திருந்தனர். ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் மற்ற மொழிகளில் வேறு இயக்குனர்கள் ரீமேக் படத்தை இயக்கியிருந்தாலும் தமிழில் மட்டும் அதே இயக்குனரே இப்படத்தை இயக்கியிருக்கிறார்.  மற்ற மொழிகளில் அதே பெயரில் இப்படம் வெளியானாலும் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் கெளதமி, சார்லி, கலாபவன் மணி, டெல்லி கணேஷ், நிவேதா தாமஸ், பேபி எஸ்தர், இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லாலின் மகன் ப்ரணவ் நடித்துள்ளார். ‘பாபநாசம்’ படத்தின் இசையை ஜூன் மாதத்தில் வெளியிடவுள்ளனர்.

இப்படத்தை ஜூலை மாதம் 17ஆம் தேதி ரம்ஜான் தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதே நாளில் தனுஷின் ‘மாரி’ படமும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ படமும் வெளியாகவுள்ளது. ரம்ஜான் அன்று வரிசை கட்டி நிற்கும் படங்களை பார்த்தால் இப்பவே திரையுலகம் களைகட்டும் எனத் தெரிகிறது.