சிவகார்த்திகேயனின் இயக்குனரை மடக்கிய தனுஷ்!


சிவகார்த்திகேயனின் இயக்குனரை மடக்கிய தனுஷ்!

‘மெரினா’ படத்தில் மெயின் ஹீரோவாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். இதனைத் தொடர்ந்து ‘மனம் கொத்தி பறவை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படங்களில் நடித்தார். சுமாரான வெற்றியை இப்படங்கள் கொடுத்தாலும் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.

துரை செந்தில்குமார் இயக்கியிருந்த இப்படத்தில் ப்ரியா ஆனந்த், நந்திதா, உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் சிட்டி முதல் பட்டிதொட்டி வரை ஹிட்டடித்தது. எனவே இக்கூட்டணி மீண்டும் இணைய ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தது.

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’ என இரு படங்களும் சிவகார்த்திகேயனின் மார்கெட்டை உயரத்தில் கொண்டு நிறுத்தியது. இதுதான் சரியான சமயம் என்று ‘எதிர்நீச்சல்’ கூட்டணி மீண்டும் இணைந்தது. பள்ளி தேர்வு சமயம் என்பதால் ‘காக்கி சட்டை’ கரையேறாது என்று நினைத்த உள்ளங்களில் சுனாமியே அடித்தது. இப்படம் தற்போது 100 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

நாம் வாய்ப்பளித்த அந்த இயக்குனர் தன் நண்பருக்கே இப்படி ஒரு ஹிட் கொடுத்திருக்கிறார் என்றால் அவர் இயக்கத்தில் நாம் நடித்தால் இதைவிட பெரிய ஹிட் கொடுக்கலாம் என்று தனுஷ் நினைத்தாரோ என்னவோ..?. துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’, வேல்ராஜ் இயக்கத்தில் ‘வேலை இல்லா பட்டதாரி’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ மற்றும் பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு படம் என தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.