எம்ஜிஆர், ரஜினி, விஜய் இடங்களில் விஜய் ஆண்டனி.. இயக்குனர்கள் பேச்சு.


எம்ஜிஆர், ரஜினி, விஜய் இடங்களில் விஜய் ஆண்டனி.. இயக்குனர்கள் பேச்சு.

நெகட்டிவ்வான டைட்டில் வைத்தால் படம் ஓடாது என்ற சென்டிமெண்ட் டயலாக்கை எல்லாம் உடைத்தெறிந்து கோடிகளை அள்ளி வருகிறான் பிச்சைக்காரன்.

இப்படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று சென்னை, வடபழனியிலுள்ள ஆர்கேவி ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, சாட்னா டைட்டஸ், இயக்குனர் சசி, தீபா ராமானுஜம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் இயக்குனர்கள் லிங்குசாமி, மோகன் ராஜா, சரவண சுப்பையா, எஸ் எஸ். ஸ்டேன்லி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் சரவண சுப்பையா பேசியதாவது…

எம்ஜிஆரின் நீதிக்கு தலை வணங்கு, ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு ஆகிய படங்களில் ஒரு பணக்காரனாக இருந்தவர் ஏழையாக மாறுவதாக காட்சி இருக்கும்.

அதுபோல் அம்மா சென்டிமெண்ட் காட்சிகள். ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே…’ என்ற பாடல் ரஜினிக்கு கிடைத்தது போல, ‘நூறு சாமிகள் இருந்தாலும் அம்மாவை போல் ஆகிடுமா…’ என்ற பாடல் விஜய் ஆண்டனிக்கு அமைந்து விட்டது.

விழாவில் மோகன் ராஜா பேசியதாவது…

‘தனி ஒருவன்’ என்ற தலைப்பை நான் வைத்தபோது பல விமர்சனங்கள் வந்தது. ஆயிரத்தில் ஒருவன் ஓகே சார். அது என்ன சார்? ‘தனி ஒருவன்’ என்று கிண்டல் செய்தனர்.

அதுபோல் ‘இறுதிச்சுற்று’ தலைப்பை கேட்டபோது அது மாதவனுக்கே இறுதிச்சுற்று என்றனர். ஆனால் இவை இரண்டும் மாபெரும் வெற்றிப் பெற்றது. அதுபோல் இந்த பிச்சைக்காரனும் வெற்றிப் பெற்றுள்ளான்” என்றார்.

விழாவில் லிங்குசாமி பேசியதாவது…

விஜய் ஆண்டனி நடித்த எந்தப் படத்தையும் நான் இதுவரை பார்க்கவில்லை. ஆனால் இப்படத்தை பார்த்து விட்டேன். பிச்சைக்காரன் விரதத்தை முடித்துவிட்டு கேரவனில் சென்றுவிட்டு உடையை மாற்றிக் கொண்டு விஜய் ஆண்டனி நடந்து வருவார்.

அந்தக் காட்சியில் அவரை பார்த்தபோது அந்த கம்பீரத்தில் ரஜினியின் ஸ்டைலையும் விஜய்யின் மாஸையும் பார்ப்பது போல் இருந்jது. அப்படி அருமையாக நடித்திருந்தார் விஜய் ஆண்டனி” என்றார்.