கமல், விஜய், அஜித்தை பின்பற்றுகிறாரா ரஜினிகாந்த்?


கமல், விஜய், அஜித்தை பின்பற்றுகிறாரா ரஜினிகாந்த்?

முன்னணி நாயகர்கள் எப்போதும் பிரபலமான கலைஞர்களையே தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால் கமல் ஒவ்வொரு முறையும் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதில் தயக்கம் காட்டாதவர். என்றென்றும் புதுமைகளை தன்னுடைய படங்களிலும் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் செய்து காட்டி வருபவர்.

அதற்கு இவரது சமீபத்திய உதாரணம் இசையமைப்பாளர் ஜிப்ரான். இந்த இளம் இசையமைப்பாளருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார் கமல். ‘உத்தமவில்லன்’, ‘பாபநாசம்’, ‘விஸ்வரூபம்-2’, ‘தூங்காவனம்’ என இவர்களின் கூட்டணி தொடர்ந்து வருகிறது.

இவரை தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்டவர்களும் இளம் தலைமுறை கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து வருகின்றனர். விஜய் ‘கத்தி’ படத்திற்கும், அஜித் ‘தல 56’ படத்திற்கும் இளம் இசையமைப்பளார் அனிருத்துக்கு வாய்ப்பளித்துள்ளனர்.

இந்நிலையில் பெரும்பாலும் பிரபலமான இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்துவந்த ரஜினி தற்போது இளம் கலைஞர்கள் இயக்குனர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பளித்துள்ளார். தாணு தயாரிக்கும் ரஜினியின் புதிய படத்தில் இவர்களுடன் இளம் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் பணியாற்றிவருகின்றனர்.

கமல், விஜய், அஜித் இவர்களை தொடர்ந்து தற்போது ரஜினியும் இளம் தலைமுறைக்கு வாய்ப்பளித்து வருவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டாப் ஹீரோக்களின் இந்த புதிய சிந்தனைகள் புதிய தலைமுறையினரிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.