‘என் படத்துக்கு லேடீஸ், குட்டீஸ் வராதீங்க ப்ளீஸ்’ – மிஷ்கின்


‘என் படத்துக்கு லேடீஸ், குட்டீஸ் வராதீங்க ப்ளீஸ்’ – மிஷ்கின்

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு பிறகு ‘பிசாசு’ படத்தை இயக்கினார் மிஷ்கின். தற்போது இயக்குனர் ராம், பூர்ணா நடிக்கும் ‘சவரக்கத்தி’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் மிஷ்கின்.

இந்நிலையில் பி.வாசு மகன் சக்தி மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்து நடிக்கும் ‘தற்காப்பு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் மிஷ்கின். அவரின் தீப்பறக்கும் அனல் பேச்சின் துளிகள் இங்கே…

“இந்த தற்காப்பு படம் யுஏ சான்றிதழ் பெற்றுள்ளது. எனவே முப்பது சதவீத வரி கட்டவேண்டிய நிலையில் இருக்கிறார் தயாரிப்பாளர். கெட்ட வார்த்தைகள் மற்றும் வன்முறை இருந்தால் அதற்கும் ஏ சான்றிதழ் கொடுத்து விடுகிறார்கள். கெட்டவார்த்தை, வன்முறை இல்லாமல் நம் வாழ்க்கையே இல்லை. நாம் ஒருவரை திட்டும் போது கோபப்படாமல் இருக்க முடியுமா? கொஞ்சி பேசியா திட்ட முடியும்.
சென்சார் அதிகாரிகளால் நாங்கள் எங்கள் சுதந்திரத்தை இழந்துவிட்டோம். நான் பிசாசு என்றொரு படமெடுத்தேன்.  என் சினிமா துறையில்தான் நான் நிறைய பிசாசுகளை பார்த்தேன். பிசாசு அன்பானது அதைப்பார்த்து பயப்பட வேண்டாம் என்பதால்தான் அப்படி ஒரு படமெடுத்தேன்.

ஏதாவது ஒரு காட்சி வைத்தால் சார்.. இந்த காட்சி வேண்டாம் என்று கேராமேன் சொல்கிறார். இப்படி இருந்தால் எப்படி படம் எடுக்க முடியும்? இன்று குழந்தைகளுடன் படம் பார்க்க முடிவதில்லை என்கிறார்கள். சினிமா குழந்தைகளுக்கான மீடியம் இல்லை. அவர்களுக்கு கார்ட்டூன் படங்களை காட்டுங்கள். என் படத்துக்கு குழந்தைகளோடு வராதீர்கள்.

நான் அடுத்து எடுக்கப்போகும் படம் திகில் கலந்த ஏ படம்தான்.  தயவு செய்து லேடீஸ், குட்டீஸ் என் படத்திற்கு வரவேண்டாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் இவர்கள் எல்லாம் இல்லாமல் போயிருந்தால் நம் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? என்று யோசித்துப்பாருங்கள். அப்படிப்பட்ட ஜாம்பவான்கள் இருக்கும் இந்த சினிமா துறையை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று பேசினார்.