நட்ராஜ், அசோக் செல்வன் படங்களை தயாரிக்கும் ஈராஸ்!


நட்ராஜ், அசோக் செல்வன் படங்களை தயாரிக்கும் ஈராஸ்!

உலக அளவில் திரைப்படத்துறையில் பிரபலமாக விளங்கி வரும் நிறுவனம் ‘ஈராஸ் இன்டர்நேஷனல்’. இந்நிறுவனம் ஆர்.வி.ஃபிலிம்ஸுடன் இணைந்து ‘பிறை தேடிய நாட்கள்’ மற்றும் ‘எங்கிட்ட மோதாதே’ என இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளது.

‘விடியும் முன்’ படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய பிரபு ஆப்ரகாம் ‘பிறை தேடிய நாட்கள்’ என்ற இந்தப் புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.  இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். காதல் கதையாக உருவாகும் இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

மற்றொரு படமான ‘எங்கிட்ட மோதாதே’ படத்தில் சதுரங்கவேட்டை புகழ் நட்டி (பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ் சுப்ரமணியம்) நாயகனாக நடிக்க சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். மேலும் ராஜாஜி, விஜய் முருகன், ராதா ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘மயக்கம் என்ன’, ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராமு செல்லப்பா இயக்குகிறார்.

இவ்விரண்டு படங்களையும் இந்தாண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளனர் ஈராஸ் நிறுவனத்தினர்.

ரஜினி படத்தில் இடம்பெற்ற ‘எங்கிட்ட மோதாதே’ பாடல் மிகவும் பிரபலமானது. இதே பெயரில் விஜயகாந்த், ஷோபனா நடிக்க 1990ஆம் ஆண்டு ஒரு படம் வெளியானது தாங்கள் அறிந்ததே.