ரஜினி கமலுடன் ஒன்று கூடும் தென்னிந்திய நட்சத்திரங்கள்


ரஜினி கமலுடன் ஒன்று கூடும் தென்னிந்திய நட்சத்திரங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில், 1980களில் திரையுலகை கலக்கிய நட்சத்திரங்கள் மீண்டும் ஒன்று கூடுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர்கள் இந்த சந்திப்பு விழாவை அதாவது “கேட்-டுகெதரை” நடத்தி வருகின்றனர். வருடத்தில் ஒருநாள் இவர்கள் ஒன்று கூடி, தங்களது நட்பையும், தங்களது மலரும் நினைவுகளையும் புதுப்பித்து கொள்கின்றனர் இவர்கள்.

நட்சத்திரங்கள் கூடும் நாளில், புகைப்படக்காரர்கள், வீடியோ உள்ளிட்ட யாருமே உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நடிகர் / நடிகையர் இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வர்.

கடந்த ஆண்டிற்கான சந்திப்பு பொறுப்புகளை நடிகர் மோகன்லால் ஏற்றுக் கொண்டார். ரஜினி, பிரபு, குஷ்பு, நதியா, சிரஞ்சிவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அதே போல, இந்த ஆண்டுக்கான சந்திப்பை நடிகை ராதிகா ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால், இம்முறை பெரிய விழா போன்று கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

ராதிகா மகள் ரேயான் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த நிகழ்ச்சி 1980 களில் ஒன்றிணைந்த நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைக்கப்படுகிறது.

மூத்த நடிகர்களுடன் இன்றைய நட்சத்திரங்கள் சிம்பு, வரலட்சுமி, வேதிகா, மஹத், வைபவ், நீது சந்திரா உள்ளிட்ட பலர் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

ரஜினி, கமலுக்கு சிம்புவும், ஸ்ரீபிரியாவுக்கு நீதுவும். சில்க் ஸ்மிதாவுக்கு பிந்து மாதவி, நமீதாவும் மரியாதை செய்யும் விதமாக நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

கோவை சரளா, மனோபாலா நகைச்சுவை நாடகத்தில் பங்கேற்கின்றனர். மேலும் பல நடிகர்களுக்கு காட் ஃபாதராக விளங்கிய இயக்குனர் கே.பாலசந்தருக்கு அனைத்து நட்சத்திரங்களும் அஞ்சலி செலுத்துகின்றனர். தவிர 1980களில் சாதித்த நடிகர், நடிகைகளின் ஒலி-ஒளி நிகழ்ச்சியும் நடக்க உள்ளது” என்றார்.