ரஜினியின் 40 வருட சினிமா வாழ்க்கையில் முதன்முறையாக…!


ரஜினியின் 40 வருட சினிமா வாழ்க்கையில் முதன்முறையாக…!

1975ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு காட்சியில் கதவை திறந்து கொண்டு அறிமுகமாவார் ரஜினிகாந்த். அன்று நுழைந்த இவர் தன் திரைப்பயணத்தை கடந்த 40 ஆண்டுகளாக வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆண்டுகளில் பல ஹிட் படங்களை கொடுத்த ஒரே நடிகர் ரஜினிகாந்த் எனலாம். இவர் நடித்த 150க்கும் மேற்பட்ட படங்களில் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியுள்ளது. பல ஹிட் படங்களை இவர் கொடுத்திருந்தாலும் இதுவரை எந்த ஒரு படத்தின் தொடர்ச்சி பாகத்திலும் இவர் நடிக்கவில்லை.

ரஜினியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் படமாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘பாட்ஷா’ படம் இதுநாள் வரை கருதப்படுகிறது. ஆனால் ‘பாட்ஷா 2’ படம் எடுக்க பலர் முன்வந்தபோதும் அதை ரஜினிகாந்த் மறுத்து வந்தார். ஆனால் முதன்முறையாக தற்போது ‘எந்திரன் 2’ படத்தில் நடிக்கிறார்.

ஷங்கர் இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு இன்று சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள ஒரு தீம் பார்க்கில் தொடங்கியுள்ளது. ரஜினி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரஜினியின் கபாலி படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் வெளியானதால், ‘எந்திரன் 2’ படத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.