3 மாதங்களுக்கு தமிழ் படங்கள் வெளிவராது. தயாரிப்பாளர்கள் தாணு, மன்னன் அறிவிப்பு


3 மாதங்களுக்கு தமிழ் படங்கள் வெளிவராது. தயாரிப்பாளர்கள் தாணு, மன்னன் அறிவிப்பு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம், கலைப்புலி தாணு தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். தற்போது திரைப்படத்துறை சந்தித்து வரும் இன்னல்கள், லாப நஷ்டங்கள், தொழிலாளர்கள் பிரச்சினை, பட வெளியீட்டின் போது ஏற்படும் வழக்குகள் போன்றவற்றை குறித்து விவாதங்கள் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய தயாரிப்பாளர் மன்னன் கூறியதாவது… ‘படப்பிடிப்பு உபகரணங்களுக்கான வாடகை அதிகரிப்பு நடிகர், நடிகைகளுக்கான அதிகபட்ச சம்பளம் உள்ளிட்ட காரணங்களால் படத்தின்  தயாரிப்பு செலவு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.  வங்கி கடன், தனியாரிடம் பணம் பெற்று படங்கள் தயாரிக்கப்பட்டும் அவற்றை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதால் பல பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியுள்ளது.

இதுபோன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வை தேட அவகாசம் வேண்டும். எனவே, இப்பிரச்சினை சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் அடுத்த 3 மாதங்களுக்கு படப்பிடிப்பை நிறுத்த வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார். இக்கோரிக்கையை சங்க உறுப்பினர்கள் பலர் வரவேற்றனர்.

இதன் பின்னர் கலைப்புலி எஸ். தாணு நிருபர்களிடம் பேசியதாவது… இது ஒரு நல்ல தீர்மானம். ஆனால், பல தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு இதில் அடங்கியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் மட்டும் இதுகுறித்து முடிவு எடுக்க முடியாது. அனைத்து சங்கங்களையும் ஆலோசித்து, கருத்துகளைக் கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்.