ஒரு பாட்டு ஒரு நாடு… காரில் பாடல் வெளியிட முயற்சி.!


ஒரு பாட்டு ஒரு நாடு… காரில் பாடல் வெளியிட முயற்சி.!

ஒரு படம் உருவாகும்போதே அப்படத்திற்கு வித்தியாசமாக பெயர் வைப்பது, பெயரே வைக்காமல் தாமதிப்பது… வரிவிலக்கு கிடைக்காது என தெரிந்தும் முதலில் ஆங்கிலத்தில் பெயர் வைத்து பின்னர் இறுதியாக மாற்றுவது, டீசரை வெளியிடுவது, பர்ஸ்ட் லுக்கை நள்ளிரவில் வெளியிடுவது, பாடலை இணையத்தில் லீக் செய்வது, சிங்கிள் ட்ராக் ரிலீஸ்… இப்படியாக பல்வேறு வித்தியாச முறைகளை தமிழ் திரையுலகினர் கடைபிடித்து வருகின்றனர்.

இதே வரிசையில் தற்போது ‘சென்னை சிங்கப்பூர்’ படக்குழுவினரும் இணைந்துள்ளனர். இப்படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ பட புகழ் ஹபீப் படேல் ஆகிய இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். அப்பாஸ் அக்பர் இயக்க ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு முகேஷ்.

காமிக்புக் பிலிம்ஸ் மற்றும் சிங்கப்பூர் அரசை சேர்ந்த மீடியா அத்தாரிட்டி ஆஃப் சிங்கப்பூர் என்ற நிறுவனமும் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதையை போன்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் நடத்தவுள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான், சத்யா உள்ளிட்ட படக்குழுவினர் ஒரு காரை எடுத்துக் கொண்டு சிங்கப்பூர் செல்கிறார்கள்.

பயணத்தை சென்னையில் தொடங்கும் போது ஒரு பாடலை வெளியிடுகின்றனர். பின்னர் வங்கதேசம், மியான்மர், தாய்லாந்த், மலேசியா, மற்றும் இறுதியாக சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தலா ஒரு பாடலை வெளியிடுகின்றனர்.

தற்போது அதற்கான விசா அனுமதி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். இவர்களின் இந்த வித்தியாச முயற்சிக்கு ஒரு கார் நிறுவனம் தங்களது நிறுவன காரை தந்து உதவ முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.