ரஜினி ஸ்டைலில் கவுண்டமணி; இது சிரிக்கிற மேட்டர் இல்ல பாஸ். சீரியஸ்!


ரஜினி ஸ்டைலில் கவுண்டமணி; இது சிரிக்கிற மேட்டர் இல்ல பாஸ். சீரியஸ்!

தற்போதைய தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்தாலும், என்றும் ‘காமெடிகிங்’ கவுண்டமணிதான் என்று ரசிகர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். இளையராஜாவின் முதல் படமான ‘அன்னக்கிளி’யில் அறிமுகமானாலும், ரஜினி-கமல் இணைந்து நடித்த பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தில் கவுண்டர் பிரபலமானார்.

தனது நகைச்சுவை திறமையால் தொடர்ந்து தமிழ் திரையுலகை கலக்கினார். நடிகர் செந்திலுடன் இவர் இணைந்த காமெடி காட்சிகளின் ஒளிப்பரப்பு பல காமெடி சேனல்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. பல படங்களில் கதாநாயகனுக்கு சமமான கேரக்டரில் வலம் வந்தார். இவருடைய நகைச்சுவைக்காகவே ஓடிய படங்களும் உண்டு. 250 மேற்பட்ட படங்களில் நடித்த இவர் சிறிது காலம் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில், மறுபடியும் திரையுலகில் தனது இன்னிங்ஸை தொடங்கிவிட்டார். வரிசையாக 3 படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். ‘49 ஓ’, ‘வாய்மை’ போன்ற படங்களை முடித்து விட்டு ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் கேரவன் உரிமையாளராக நடிக்கும் கவுண்டமணிக்கு ஜாலியான ஹீரோ வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். படத்தின் ஓப்பனிங் காட்சியில் சிவாஜி படத்தில் ரஜினி காரில் வந்து இறங்குவது போன்ற கெட்டப்பிலேயே கவுண்டமணியும் என்ட்ரி கொடுக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் இன்றைய ஹீரோக்களைப் போன்று கலக்கல் காஸ்டியூமில் கலக்கவிருக்கிறாராம்.

மேலும், இந்த படத்தில் அவருக்கு ரஜினியைப் போன்று ஓர் அறிமுக பாடல் உள்ளதாம். ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை’ என்ற படத்தலைப்பின்படியே தொடங்கும் அந்த பாடலை 15க்கும் மேற்பட்ட டியூன்களில் பதிவு செய்திருக்கிறார்களாம். இத்துடன் போனஸ் இணைப்பாக இன்னொரு பாடலில் கவுண்டர் இதுவரை நடித்த படங்களில் பிரபலமான டயலாக்குகளை வைத்து உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.

சமீபத்தில் சுந்தர்.சி. இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மனை’ படத்தில், சந்தானம் பாடும் ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ பாடல் கவுண்டரின் பிரபலமான டயலாக் என்பது குறிப்பிடத்தக்கது.

(அடேய் மண்டையா “உன்ன யாருடா இப்படியெல்லாம் பாட்டு எழுதச் சொன்னதுன்னு கவுண்டர் கேட்கப்போறாரு…” பாத்துங்க சார்…)