ரஜினி, அஜித், விஜய் வரிசையில் மன்சூர் அலிகான்!


ரஜினி, அஜித், விஜய் வரிசையில் மன்சூர் அலிகான்!

ஒரு வளரும் நடிகர் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள டாப் ஹீரோக்களின் புகழ் பாடும் காட்சிகளை தன் படத்தில் இடம் பெற செய்வார்கள். விஜய் மற்றும் அஜித்தின் ஆரம்பகால படங்களில் ரஜினியை புகழ்வது போல நிறைய காட்சிகள் இருக்கும். முக்கியமாக அஜித்தின் ‘வான்மதி’ படத்தில் இதுபோன்ற நிறைய காட்சிகள் இருக்கும். அதுபோல் விஜய்யும் நிறைய படத்தில் இப்படியான காட்சிகளை வைத்திருப்பார்.

தற்போது அஜித் விஜய் இருவரும் வளர்ந்து முன்னணி நடிகர்கள் வரிசையில் உள்ளனர். தற்போது இவர்களின் புகழ் பாடும் காட்சிகளை இன்றைய இளம் நட்சத்திரங்கள் அவர்களின் படங்களில் வைக்கின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணங்களை சொல்வது பொருத்தமாக இருக்கும்.

சமீபத்தில் வெளியான ‘யட்சன்’ படத்தில் ஆர்யா அஜித் ரசிகராக நடித்திருப்பார். அதுபோல தற்போது வளர்ந்து வரும் ‘பாவாடை’ என்ற மலையாள படத்தில் விஜய் ரசிகராக ப்ரித்விராஜ் நடித்தி வருகிறார் என்பதை நாம் ஓரிரு தினங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தோம். அதுபோல ஜெயம் ரவியும் டி.ராஜேந்தரின் ரசிகராக ‘ரோமியோ ஜீலியட்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ரஜினி, அஜித், விஜய் வரிசையில் தற்போது மன்சூர் அலிகானும் இணைந்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் தற்போது நடித்து வரும் ‘புரூஸ் லீ’ படத்தில் நடிகர் மன்சூர் அலிகானின் ரசிகராக நடிக்கிறாராம். அவருக்கு கட்-அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்ற காட்சிகளும் படத்தில் உள்ளதாம்.

இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி கர்பந்தா நடிக்கிறார். ‘நாளைய இயக்குனர் சீஸன் 4’ல் பங்குபெற்ற பிரசாந்த் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.