ஒரே நாளில் எம்ஜிஆர் ஸ்தானத்திற்கு உயர்ந்த விஜய்!


ஒரே நாளில் எம்ஜிஆர் ஸ்தானத்திற்கு உயர்ந்த விஜய்!

பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியினரின் மகனும் நடிகருமான சாந்தனு, டிவி தொகுப்பாளினி கீர்த்தி திருமணம் இன்று நடைபெற்றது. இது பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்ற காதல் திருமணம் ஆகும். இவர்களின் திருமணத்தை முன்னிட்டு இரு வீட்டாரின் சங்கீத் விழா சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதில் ஆர்யா, விஷ்ணு, விஷால் மற்றும் நடிகைகள் ஜனனி ஐயர், விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுஸில் நடைபெற்ற இன்றைய திருமண விழாவில் கார்த்தி, விஷால், விக்ராந்த், சத்யராஜ், பிரபு, வெங்கடேஷ் நடிகைகள் ஜோதிகா, சுகன்யா, ரேவதி, சுஹாசினி, குஷ்பூ மற்றும் இயக்குனர்கள் மணிரத்னம், பார்த்திபன், பாண்டியராஜன், தரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இத்திருமண விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு தாலியை ஆசீர்வதித்து மணமகன் சாந்தனு கையில் கொடுத்தார். சாந்தனு விஜய்யின் தீவிர ரசிகர் என்பதால் இவ்வாறு விஜய்யிடம் கேட்டுக் கொண்டாராம். சாந்தனுவின் தந்தை பாக்யராஜ்-பூர்ணிமா திருமணத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கடந்த 1984ஆம் ஆண்டு நடத்தி வைத்தார். இன்று அவர் வழியில் இளையதளபதி விஜய், பாக்யராஜ் மகன் திருமணத்தை நடத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை (ஆகஸ்ட் 22ஆம் தேதி) மாலை 6.30 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.