‘என் படங்களை விட மாதவன் படமே முதல் சாய்ஸ்..’ – சூர்யா


‘என் படங்களை விட மாதவன் படமே முதல் சாய்ஸ்..’ – சூர்யா

மாதவனின் கடும் உழைப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுதிச்சுற்று’. சுதா இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. பாடல்களை இயக்குனர் பாலா வெளியிட சூர்யா பெற்றுக்கொண்டார்.

பின்னர் விழாவில் சூர்யா பேசியதாவது…. “நான் நடித்த படமோ அல்லது கார்த்தி படமோ வெளியாகும் நாளில் மாதவன் நடித்த படம் வெளியானால் அவரின் படமே எங்கள் குடும்பத்தாரின் முதல் சாய்ஸ் ஆக இருக்கும். என் வீட்டிலேயே அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவர் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காட்டி நடிப்பார். இந்த படத்தின் கேரக்டருக்காக லண்டன் சென்று பயிற்சி எடுத்தார். இந்தப் படம் அவருக்கு ஒரு தவம். இது வெற்றிப்படமாக அமையும்.

மாதவனை மட்டுமல்லாமல் இயக்குனர் சுதாவையும் எனக்கு ரொம்ப நாட்களாக தெரியும். இருவரும் மணிரத்னம் சாரிடம் பாடம் கற்றவர்கள். இந்த ‘இறுதிச்சுற்று’ உருவானது முதல் எல்லாவற்றையும் தெரிந்து வருகிறேன்.

இப்படத்தை ராஜ்குமார் இரானி இந்தியில் தயாரித்துள்ளார். அவரால் இப்படத்தின் மீதுள்ள நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் நன்றாக அமைந்துள்ளது.”

இவ்வாறு சூர்யா பேசினார்.