மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தீவில் மாட்டி அவஸ்தைப்பட்ட நடிகை!


மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தீவில் மாட்டி அவஸ்தைப்பட்ட நடிகை!

ரஜினிமுருகன் நாயகி கீர்த்தி சுரேஷையும் சென்னை மழை விட்டு வைக்கவில்லை, இவரும் அண்மையில் பெய்த கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தன் வீட்டில் எடுத்த புகைப்படமொன்றை வெளியிட்டு தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து கூறியுள்ளதாவது…,

என் குடும்பத்தாருடன் நான் அனுபவித்த இந்த வெள்ள பாதிப்பு மிகவும் என்னை பாதித்து விட்டது. அப்போது எனது பாட்டி ஒரு ஆப்ரேஷனுக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உறவினர்கள் பாட்டியைப் பார்க்க எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். திடீரென எங்கள் வீட்டில் நுழைந்த வெள்ளம்… மெல்ல மெல்ல அதன் உயரத்தை நீட்டிச் சென்றது. என்ன நடக்கிறது என்பதை நாங்கள் யூகிக்கும் முன்பே வெள்ளம் அதன் வேலையை காட்டத் துவங்கியது.

முட்டி அளவு தண்ணீர் ஏறி விட்டது. அந்நேரம் பவர் கட். சாப்பிட எதுவும் இல்லை. கையில் கிடைத்த பிரட் பிஸ்கெட்டுகளை வைத்துக் கொண்டு மேல்தளம் சென்றோம். இரண்டு நாட்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒரு தீவில் இருப்பதை போல உணர்ந்தோம்.

ஜன்னல் வழியாக பார்த்தபோது… பெரும்பாலான மக்களின் கண்ணீரையே அதிகளவில் காண முடிந்தது, மொபைல் நெட்வொர்க் இல்லாமல் போனதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின்னர் எனது நண்பர்களின் உதவியால் ஒவ்வொருவராக வீட்டில் இருந்து வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்தோம்.

மருத்துவமனையில் ஜெனரேட்டர் ரூமில் தண்ணீர் புகுந்ததால் பாட்டிக்கு சிகிச்சை ரத்தானது. ஒருவேளை பாட்டிக்கு அறுவைசிகிச்சை நடந்திருந்தால் அவர் இப்போது இருந்திருப்பாரா? எனத் தெரியவில்லை. காரணம் அங்கு ஐசியூவில் தான் நிறைய பேர் உயிர் இழந்துள்ளனர். நல்லவேளை பாட்டியும் நாங்களும் தப்பித்தோம்” என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.