‘விஜய்யுடன் விரைவில் இணைவேன்’ – கௌதம் மேனன்


‘விஜய்யுடன் விரைவில் இணைவேன்’ – கௌதம் மேனன்

கமலுக்கு ஒரு ‘வேட்டையாடு விளையாடு’, சூர்யாவுக்கு ஒரு ‘காக்க காக்க’, அஜித்துக்கு ஒரு ‘என்னை அறிந்தால்’,  சிம்புவுக்கு ஒரு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் கௌதம் மேனன். தற்போது விக்ரமுடன் இணைந்து ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை வழங்க இருக்கிறார். ஆனால் விஜய்யுடன் இணைவது தள்ளிக்கொண்டே போனது.

விஜய்யுடன் இணையவிருந்த ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ படம் போஸ்டர்கள் வெளியாகிய நிலையில் நின்று போனது. இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். இந்தப் படம் மீண்டும் தொடங்கப்படுமா? என்ற கேள்வி கௌதம்மேனனிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் தவிர்க்க முடியாத ஒன்றானது.

சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த கௌதம் இப்படம் பற்றி கூறினார். அதில்…  “படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் நடப்பது போன்று இருந்தது. படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள் இடம் பெற்றிருந்தது. இதனை விஜய் ரசிகர்கள் அதிகம் விரும்பமாட்டார்கள் என விஜய் நினைத்ததாலேயே அச்சமயம் விலகினார்.

ஆனால் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ படம் கைவிடப்படவில்லை. கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்து ஒரு புதிய திரைக்கதையுடன் விஜய் அவர்களை சந்திப்பேன். கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு விஜய்யுடன் விரைவில் இணைவேன்” என்றார்.