ரீமேக்கில் நடிக்க மறுத்த கவுண்டர்; வெறுத்து போன சுந்தர் சி


ரீமேக்கில் நடிக்க மறுத்த கவுண்டர்; வெறுத்து போன சுந்தர் சி

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட காமெடியன்கள் வந்தாலும், வந்து வந்து போனாலும்,  கவுண்டர் என்று அன்பாக அழைக்கப்படும் கவுண்டமணியின் இடம் இன்னும் காலியாகவே உள்ளது. கதாநாயகனுக்கு இணையாக சம்பளமும் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு இணையாக காட்சிகளும் இவருக்காக அமைக்கப்பட்டன.

சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார் கவுண்டர். தற்போது  ’49 ஓ’, ‘வாய்மை’, ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை’ உள்ளிட்ட படங்களின் மூலம் மீண்டும் காமெடியில் கலக்க வருகிறார் இவர்.

இந்நிலையில், அவரின் வருகையை தனக்கு சாதகமாக்கி கொள்ள நினைத்த ஒரு பிரபல தயாரிப்பாளர் சுந்தர் சி மற்றும் கவுண்டமணி கூட்டணியை இணைக்க விரும்பினார். இவர்கள்  கூட்டணியில் இதற்குமுன் வெளிவந்த ‘முறை மாமன்’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘ஜானகிராமன்’, ‘மேட்டுக்குடி’ போன்ற வெற்றிப் படங்களின் வரிசையில் தன் புதிய படத்தையும் இணைத்துக் கொள்ள விரும்பினார்.

மலையாளத்தில் பெரிய ஹிட்டடித்த ‘வெள்ளிமூங்கா’ என்ற அரசியல் படத்தை எடுக்க திட்டமிட்டு இதுகுறித்து சுந்தர் .சி யிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இயக்குனர் ஓகே சொல்ல  பின்னர் கவுண்டரை சந்திக்க சென்றுள்ளார் அந்த பிரபலம்.

ஆனால் கவுண்டரோ… “நாங்க நடிக்காத அரசியல் படமா? நாங்க பண்ணாத அரசியலா? இனிமே அதெல்லாம் முடியாது. அதுவும் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் நான் ரீமேக் படங்களில் நடிக்க மாட்டேன் என மறுத்து விட்டாராம். கவுண்டருடன் இணைந்து ஒரு  ஹிட்டடிக்கலாம் என்று காத்திருந்த சுந்தரும் வெறுத்து போய் விட்டாராம்.

‘டார்லிங்’ நிக்கி கல்ராணி ஒரிஜினல் மலையாள படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.