‘கெட்டப்’பை மாற்ற சொன்னதால் ஷாம் விலகல்!


‘கெட்டப்’பை மாற்ற சொன்னதால் ஷாம் விலகல்!

தனது ‘12B’ படத்திலேயே தமிழின் முன்னணி நாயகிகள் சிம்ரன், ஜோதிகா இருவருடன் ஜோடி போட்டவர் ஷாம். தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வந்தாலும் ‘லேசா லேசா’, ‘இயற்கை’, ‘6’ போன்ற ஒருசில படங்களே பேசப்பட்டன. திருப்புமுனை படத்திற்கு காத்திருந்தார் ஷாம். பொறுமைக்கு எல்லை உண்டு அல்லவா? எனவே சிறிய வேடங்களில் நடிக்கத் துவங்கினார்.

எனவே, பெரிய ஹீரோக்கள் படம் என்றால் துணை கேரக்டர்களில் நடிப்பது என்றும் சிறிய படம் என்றால் தனி ஹீரோவாக நடிப்பது என்றும் முடிவெடுத்தார். இந்நிலையில் அண்மையில் வெளியான ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தில் இவர் ஏற்றிருந்த காவல் துறை  அதிகாரி வேடம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. இதனால் தற்போது இவரின் மார்கெட் வேல்யூ சற்று அதிகரித்துள்ளது எனலாம்.

இதற்கு முன்பே ‘காலக்கூத்து’ என்ற படத்தில் மெட்ராஸ் கலையரசனுடன் நடிக்க ஷாம் சம்மதித்திருந்தார். மதுரையில் படப்பிடிப்புக்கு சென்ற ஷாமின் கெட்டப்பை இயக்குனர் நாகராஜன் மாற்றச் சொல்லியிருக்கிறார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த ஷாம், இயக்குனருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். “நீங்கள் முன்பே இதுபற்றி கூறியிருக்கவேண்டும். வேறு சில படங்களில் நடித்து வருவதால் கெட்டப்பை மாற்றினால் மற்ற படங்களுக்கு பிரச்சினை வரும் என முடியாது” என்று கூறிவிட்டாராம். இறுதியில் படத்திலிருந்து விலகிவிட்டார் ஷாம்.

தற்போது அர்ஜூனுடன் ‘ஒரு மெல்லிய கோடு’ என்ற படத்திலும் ‘கேம்’ என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.