டிஸ்சார்ஜ் ஆனவுடன் தேசிய கீதத்திற்கு இசையமைத்த இளையராஜா


டிஸ்சார்ஜ் ஆனவுடன் தேசிய கீதத்திற்கு இசையமைத்த இளையராஜா

கடந்த சில நாட்களாக இளையராஜா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்ததும் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் உடனே வீடு திரும்பிய இளையராஜா வந்த சில மணி நேரங்களில் பிரசாத் ஸ்டூடியோ சென்றார்.

அங்குள்ள தன் ஒலிப்பதிவு கூடத்துக்கு சென்று ‘குற்றமே தண்டனை’ படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் பணியை தொடங்கினார். விதார்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டன் இயக்கியுள்ளார். இப்படத்தில் பாடலே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அகில இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்ற ‘தேசிய கீதம்’ (National Anthem) ஆல்பத்துக்கு இசையமைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளையும் அன்றைய தினமே தொடங்கியிருக்கிறார் இளையராஜா. இந்த தேசிய கீதம் ஆல்பத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். வருகிற 2016ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அதாவது குடியரசு தினத்தன்று இந்த ஆல்பத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அமிதாப்பச்சன் நடித்து குரல் கொடுக்கும் இந்த ஆல்பத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்குகிறார். இவர் அமிதாப், தனுஷ் நடித்த ‘ஷமிதாப்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.