எம்ஜிஆர்-ரஜினியை விட்டு வைக்காத விஜய்யின் தெறி விழா…!


எம்ஜிஆர்-ரஜினியை விட்டு வைக்காத விஜய்யின் தெறி விழா…!

தெறி படத்தின் இசை வெளியீட்டு கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. பிரம்மாண்டமான இப்படத்தை போன்றே இவ்விழாவும் நடைபெற்றது. அங்கே காணமுடிந்த சில விழா துளிகள் இதோ..

போட்டோ எடுக்கவோ வீடியோ எடுக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை. கெடுபிடிகள் இருந்தபோதும் சில புகைப்படங்களை ரசிகர்கள் எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் அரங்கிற்கு வெளியே அதிக கூட்டம் காணப்பட்டது. இதனால் போலீசார் சற்று தடுமாறினர்.

விஜய் பாடிய ‘செல்லாக்குட்டி’ பாடல் வரிகளுடன் முதலில் திரையிடப்பட்டது. விஜய் அரங்கிற்குள் வந்ததும் தேவா பாடிய ‘ஜித்து ஜில்லாடி’ பாடல் வரிகளுடன் வீடியோ திரையிடப்பட்டது.

முதலில் மேடை ஏறியவர் மீனாவும் அவரது மகள் நைனிகாவும்தான்.

மீனா கூறியதாவது…

அட்லி என்னிடம் இப்படம் குறித்து பேசியபோது என்னிடம் கால்ஷீட் கேட்க வந்திருக்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் நைனிகாவை நடிக்க கேட்டபோது எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது.

தனது முதல் படத்திலேயே இதுபோன்ற கேரக்டர் கிடைப்பது அபூர்வம். என் நைனிகாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

‘நான் கடவுள்’ ராஜேந்திரன் பேசும்போது…

“‘ஐ யம் வெயிட்டிங்’ என்ற டயலாக்கை விஜய் சார் முன் பேசும் போது பயமாக இருந்தது. ஆனால் என்னை தைரியப்படுத்தி நட்போடு பழகினார் விஜய். அவரோடு நடிக்க நான் கொடுத்து வைத்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.” என்றார்.

ஒரு அருமையான பையனை வளர்த்து இருக்கீங்க என்று விஜய்யின் பெற்றோரைப் பார்த்து நடிகர் பிரபு கூறினார்.

இயக்குநர் மகேந்திரன் பேசியதாவது…

நான் மதிக்கும் மிகப்பெரிய கலைஞன் விஜய். விஜய் போன்ற பெரிய நடிகரோடு நடித்தது மகிழ்ச்சி.

ஒரே ஒரு வெற்றிப் படத்தை கொடுத்து விட்டு இன்று சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கி விட்டார் அட்லி. கெட்ட பையன் சார் இந்த அட்லி. என்றார்.

ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது…

“இந்த தருணத்தில் ஷங்கர் சார் மற்றும் வசந்தபாலன் சார் இருவருக்கும் நன்றியைக் கூறிக் கொள்கிறேன். எனக்கு முதல் பட வாய்ப்பை இருவரும் கொடுத்தார்கள்.

இப்போது 50வது பட வாய்ப்பை வழங்கிய விஜய் சார் மற்றும் அட்லிக்கும் எனது நன்றி. விஜய் சாரை மனதில் வைத்தே இப்படத்தின் பாடல்களை உருவாக்கினேன்” என்றார்.

தயாரிப்பாளர் தாணு பேசியதாவது..

ஷங்கர் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் ஆகிய இருவரின் கலவைதான் இந்த அட்லி.

சூப்பர் ஸ்டாரை நெருங்கினால் எனக்கு பேச வராது, அதே போன்ற உணர்வு விஜய்யிடமும் ஏற்படுகிறது.

தெலுங்கு சினிமாவுக்கு ஒரு ‘பாகுபலி’ என்றால், தமிழ் சினிமாவுக்கு ஒரு ‘தெறி'” என்றார்.

அட்லி பேசியதாவது..

விஜய் சாருக்கு பொருத்தமான கதை இப்படம். அது இப்போது முழுவதும் உண்மையாகி இருக்கிறது.

எனக்கு பிடித்த காதல் விஜய், உங்களுக்கு பிடித்த ஒரு மாஸ் விஜய், குடும்பங்களுக்கு பிடித்த பேமிலி விஜய் என 3 விஜய் இருக்கிறார்.

‘தெறி’ ஒரு நல்ல அப்பாவைப் பற்றிய கதை. இதில் அரசியல் போன்ற எந்தவிதமான சர்ச்சைகளும் கிடையாது” என்றார்.

விழாவின் இறுதியில் எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் என தொடங்கும் விஜய் பற்றி ஒரு வீடியோ பதிவு ஒன்று திரையிடப்பட்டது. “வாருங்கள் கொண்டாட்டத்தை தெறிக்க விடுவோம்” என்ற டயலாக்குடன் அந்த வீடியோ நிறைவு பெற்றது.

விஜய் பேசும்போது… தெறி படத்தின் அனைத்து கலைஞர்களைப் பற்றி பேசினார். இதனிடையில் குட்டிக் கதைகளையும் சொன்னார். அதில் மாவோ அவர்களை பற்றி கூறும்போது ரஷ்ய தலைவர் என்று கூறினார். அவர் ஒரு சீனத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. (தற்போது தவறாக கூறியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் தளபதி)