இந்தவார பிரச்சினை; பூலோகம் படத்திற்கு இடைக்கால தடை


இந்தவார பிரச்சினை; பூலோகம் படத்திற்கு இடைக்கால தடை

நாம் ஏற்கெனவே சொன்னதைப் போல ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு படத்திற்கு தடைகள் வந்த வண்ணம் உள்ளன. கொம்பன்,  உத்தமவில்லன் படங்களை தொடர்ந்து இந்த வாரம் பூலோகம் படத்திற்கு தடை வந்துள்ளது. ஆனால் இம்முறை கட்சிகளால் வந்த தடையல்ல. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் இந்த தடை வந்துள்ளது.

எஸ்.பி.ஜனநாதன் வசனங்களில் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்க ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்து வெளிவரத் தயாராகியுள்ள படம் ‘பூலோகம்’. இத்திரைப்படம் தயாரிப்பதற்காக சென்னை ஆழ்வார்ப்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஆஸ்கார் நிறுவனம் ரூ. 40 கோடி கடன் பெற்றுள்ளது.

வங்கியிலிருந்து கடனாகப் பெற்ற தொகையை திரும்பச் செலுத்தாமல் திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஆஸ்கார் நிறுவனத்துக்குத் தடை விதிக்கக் கோரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்து இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ‘ஐ’ படம் வெளிவந்தது. இந்தப் படத்திற்கும் ஆஸ்கர் பிலிம்ஸ் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெற்று இருந்தது. வங்கியின் ஒப்புதல் பெறாமலே ‘ஐ’ படம் வெளிவந்ததால்  தற்போது கோர்ட்டு மூலம் ‘பூலோகம்’ படத்திற்கு தடை உத்தரவு பெற்றுள்ளது வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.