தமிழ் சினிமாவில் பார்ட்-2 படங்கள் சாதகமா? பாதகமா?


தமிழ் சினிமாவில் பார்ட்-2 படங்கள் சாதகமா? பாதகமா?

ஒரு படம் வெற்றிப் பெற்றால் அடுத்தடுத்து பாகங்கள் தயாராகி வருகிறது. அதில் ஒரு சில படங்கள் வெற்றியும் பெறுகின்றன. ஆனால் இரண்டாவது பாகம் தோல்வி அடைந்தால் மூன்றாவது பாகம் நிறுத்தப்படுகிறது.

சமீபத்தில் வந்த ‘காஞ்சனா-2’ படம் ‘முனி’ படத்தின் 3வது பாகமாக இருந்தாலும் இது தொடர் கதையாக வரவில்லை. ஆனால் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சியாக இரண்டு பாகங்கள் வெளியானது. தற்போது மூன்றாம் பாகம் தயாராகவுள்ளது. ஆனால் ஹாலிவுட் திரையுலகில் கிட்டதட்ட ஐந்து பாகங்கள் வரை எடுக்கின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணமாக அண்மையில் வெளியான ‘மிஷன் இம்பாஸிபிள்’ ஐந்தாவது பாகத்தை கூறலாம். இந்த அனைத்து பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

ஹாலிவுட்டில் சாத்தியமான ஒரு விஷயம் ஏன் கோலிவுட்டில் சாத்தியப்படவில்லை. இதுகுறித்து தமிழ் திரையுலகின் பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

நடிகர் பார்த்திபன் :

பெரும்பாலான கதைகளில் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. என்னுடைய ‘புதிய பாதை’ படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சொல்கிறார்கள். அது ஒரு இரண்டாம் பாகமாக இருக்குமே தவிர நிச்சயமாக அது ‘புதிய பாதை’யின் தொடர்ச்சி கதையாக இருக்க முடியாது.

தயாரிப்பாளர் யுடிவி தனஞ்ஜெயன் :

தமிழ் சினிமா ரசிகர்கள் கதையை விட நடிகர்கள் யார்? என்றே பார்க்கிறார்கள். ஹாலிவுட் பாணியில் படம் எடுக்க வேண்டும் என முடிவு செய்துதான் சூப்பர்மேன், பேட்மேன் படங்களைப் போல ஜீவா நடித்த ‘முகமூடி’ படத்தை தயாரித்தேன். ஆனால் முதல் படமே சரியாக போகவில்லை என்பதால் அடுத்த பாகத்தை எடுக்கவில்லை.

சிங்கம் இயக்குனர் ஹரி :

“ஒரு படம் வெற்றி பெற்று விடுவதால் அதனின் அடுத்த பாகத்திற்கு விளம்பரம் தேவையில்லை. ஆனால் முதல் பாகத்தை விட தொடர்ச்சி பாகங்கள் மீது மக்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஒருவேளை அவர்களின் எதிர்பார்ப்பை சரியாக செய்யாவிட்டால் படம் வெற்றிப்பெறாது.

சி.வி.குமார் தயாரிப்பாளர்

முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ் இரண்டாம் பாகத்தின் ஆரம்பம் மீது ஆவலை ஏற்படுத்த வேண்டும். ஒருவேளை நாம் சற்று வித்தியாசமாக கொடுத்தால் மக்கள் மறுத்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு என்னுடைய ‘பீட்சா’ படமே போதும். ‘வில்லா 2’ மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. தற்போது ‘சூது கவ்வும்’, ‘இன்று நேற்று நாளை’ மற்றும் ‘தெகிடி’ ஆகிய மூன்று படங்களின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருக்கிறேன்.