ரஜினியின் கபாலிக்கு தொடங்கியது பிரச்சினை!


ரஜினியின் கபாலிக்கு தொடங்கியது பிரச்சினை!

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு தயாரித்து ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு ‘கபாலி’ எனப் பெயரிட்டுள்ளனர். இதனை இப்படத்தின் இயக்குனர் ரஞ்சித், தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால், இதே டைட்டிலில் ஏற்கெனவே ஒரு படம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றதாகவும் பாடல்கள் வெளியாகிவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனால் ரஜினி ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில் ‘கபாலி’ டைட்டில் குறித்து விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. அப்போது அவர் கூறியதாவது…

‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, நான் தயாரிக்கும் படத்திற்கு ‘கபாலி‘ என்று பெயர் வைக்கலாம் என்று முடிவெடுத்தோம். முடிவு செய்தவுடன் தயாரிப்பாளர்கள் சங்கம், சேம்பர், கில்டு உள்ளிட்ட எல்லா இடங்களிலும் விசாரித்தோம். டைட்டில் ஓப்பனாக இருந்தது. எனவே இந்த டைட்டிலை நாங்கள் வைத்துவிட்டோம். ஆனால், அதன் பின்னர்தான் இதே டைட்டில் வேறு ஒரு படத்திற்கு உள்ளது என்ற விஷயம் எங்களுக்கு தெரியவந்தது. இருந்தபோதிலும் இதுவரை டைட்டில் சம்பந்தப்பட்ட யாரும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை” என்றார்.

இந்நிலையில் சிவா பிக்சர்ஸ் என்ற பெயரில் ‘கபாலி’ படத்தை தயாரித்திருக்கும் சிவகுமார் கூறியதாவது… “இன்னும் 1 வாரம் படப்பிடிப்பு நடத்தினால் கபாலி படம் முடிந்து விடும். இச்சமயத்தில் ‘கபாலி’ என்ற டைட்டிலை ரஜினி படப்பெயராக அறிவித்து இருக்கிறார்கள்.

கடந்த 5, 6 மாதமாக ‘கபாலி’ என்ற டைட்டிலை புதுப்பிக்க அலைந்து வருகிறேன். ஆனால் தேர்தல் வேலையாக இருக்கிறோம் என்ற கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். பல லட்சங்கள் செலவழித்து படமெடுக்க தெரிந்த எனக்கு 500 ரூபாய் கொடுத்து விண்ணப்பிக்க தெரியாதா? என்றார்.

புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘கபாலி’ படத்தின் இசையை இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.