‘என் படத்தலைப்புக்கு நான் அருகதையானவனா?’ – ஜெயம் ரவி ‘டவுட்’


‘என் படத்தலைப்புக்கு நான் அருகதையானவனா?’ – ஜெயம் ரவி ‘டவுட்’

‘நிமிர்ந்து நில்’ படத்தை தொடர்ந்து ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் நடித்தார் ஜெயம் ரவி. ஆக்ஷன், காதல் என வந்த இவர் தற்போது ‘சகலகலா வல்லவன் அப்பாடக்கர்’ என்ற முழுநீள காமெடி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் படம் குறித்து ஜெயம் ரவி கூறியதாவது…

இப்படத்தின் இயக்குனர் சுராஜின் காமெடிக்கு நான் எப்பவும் விசிறி. அவர் இப்படக் கதையை சொன்ன போதே சிரித்துக் கொண்டே கேட்டேன். படத்தில் காமெடி தூக்கலாக இருக்கும். த்ரிஷாவுடன் இது என் மூன்றாவது படம். த்ரிஷாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எல்லா விஷயத்திலும் தெளிவாக இருப்பார். அந்தத் தெளிவுதான் என்னை கவர்ந்தது.

இதில் அஞ்சலியும் நடித்துள்ளார். அவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அஞ்சலியை நான்தான் சிபாரிசு செய்தேன். அஞ்சலி எப்போதும் மாறுபட்ட கேரக்டரில் நடிப்பவர். பத்து படத்தில் சோதனை முயற்சியாக நடித்தால் ஒரு படத்தில்தான் கமர்ஷியலாக நடிப்பார். விவேக் சார் எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். படத்தின் என்னுடன் நடித்த மற்றொரு முக்கியமானவர் சூரி. காமெடியில் பின்னியெடுத்துள்ளார். அவர்தான் அடுத்த காமெடி சூப்பர் ஸ்டார்.

இந்த ‘அப்பாடக்கர்’ என்றால் அனைத்தும் கற்றவன் என்று பொருள். அதனால்தான் ‘சகல கலா வல்லவன்’ தலைப்பை வைத்தோம். ‘சகலகலா வல்லவன்’ என்பதற்கு நான் அருகதையானவனா? என்று தெரியவில்லை. ஆனால் கமலின் அந்த ‘சகலகலா வல்லவன்’ வேறு; இந்த ‘சகல கலா வல்லவன்’ வேறு.

இன்றைய நவீன உலகத்தில் திருமண உறவு மீது அவநம்பிக்கை உள்ளது. நமது கலாச்சாரத்தின் பலமே திருமணம்தான். இதுகுறித்த மெசேஜ் படத்தில் உள்ளது” என்றார்.