ஜெயம் ரவி Vs சந்தானம்; ஜெயிப்பது காதலா? காமெடியா?


ஜெயம் ரவி Vs சந்தானம்; ஜெயிப்பது காதலா? காமெடியா?

‘ஆதிபகவன்’, ‘நிமிர்ந்து நில்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள படம் ‘ரோமியோ ஜூலியட்’. இவருடன் ஹன்சிகா, பூனம்பஜ்வா, வம்சிகிருஷ்ணா, விடிவி கணேஷ் ஆகியோர்  நடித்துள்ளனர். ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். லக்‌ஷ்மன் இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற டண்டனக்கா… டண்டனக்கா… எங்க தல எங்க தல டீ ஆரு…’ பாடல் பெரும் ஹிட்டடித்துள்ளது. டங்கா மாரி ஊதாரி’ புகழ் ரோகேஷ் எழுதிய இப்பாடலை அனிருத் பாடியிருக்கிறார். இதனால் டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்து ரூ. 1 கோடி வரை நஷ்டஈடு கேட்டதும் பின்பு சமாதானம் ஆனதும் அனைவரும் அறிந்ததே. இதனால் இப்பாடலுக்கும் படத்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் நாளை ஜூன் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதே நாளில் சந்தானம் மூன்றாவது முறையாக தனி ஹீரோவாக நடித்துள்ள ‘இனிமே இப்படித்தான்’ படமும் வெளியாகவுள்ளது. சந்தானத்திற்கு ஜோடியாக அஸ்னா ஷாவேரி மற்றும் அகிலா கிஷோர் இருவரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை ‘லொள்ளு சபா’ புகழ் முருகானந்தம் என்ற இருவர் இயக்கியுள்ளனர். தனது ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ் சார்பாக சந்தானம் தயாரித்து நடித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா, FEFSI விஜயன், பிரகதி, நரேன், விடிவி கணேஷ், ரோகினி மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமானிடம் பணிபுரிந்த சந்தோஷ் குமார் தயாநிதி இசையமைத்திருக்கிறார்.

ஒரு படம் காதலுக்கும் மற்றொரு படம் காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜெயிக்கபோவது காதலா? காமெடியா என்பது நாளை தெரிந்துவிடும்.