ஜோதிகா பர்ஸ்ட்; நயன்தாரா, ஹன்சிகா எல்லாம் அப்புறம்தான்!


ஜோதிகா பர்ஸ்ட்; நயன்தாரா, ஹன்சிகா எல்லாம் அப்புறம்தான்!

மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியாகி மலையாளத்தில் பெரும் ஹிட்டடித்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படம் தமிழில் 36 வயதினிலே என்ற பெயரில் உருவாகியுள்ளது. நடுத்தர வயது பெண் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய இக்கதையில் ஜோதிகா நடித்துள்ளார். இப்படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரித்துள்ளார்.

ஜோதிகாவுடன் ரகுமான், அபிராமி, நாசர், டெல்லி கணேஷ், எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் எந்த ஒரு காட்சியையும் வெட்டாமல் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர் சென்சார் அதிகாரிகள். தற்போது இப்படத்தை மே 8ஆம் தேதி வெளியிட தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில், அதற்கு அடுத்த வாரம் மே 15ஆம் தேதி சூர்யாவின் மாஸ் படம் வெளியாகவுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா, ப்ரணித்தா, ஜெயராம், பார்த்திபன், பிரேம்ஜி, கருணாஸ், ஸ்ரீமன், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இதே மே 15ஆம் தேதியில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோர் நடித்துள்ள ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படமும் வெளியாகவுள்ளது. இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை யுடிவி நிறுவனமும் ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸூம் இணைந்து தயாரித்துள்ளது. வர்ஷன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும் இதே தேதியில் புதிய வரவாக வந்து ஒட்டிக் கொண்டுள்ளது ‘ரோமியோ ஜூலியட்’ படம். இதில் ஜெயம் ரவி, ஹன்சிகா, பூனம்பஜ்வா மற்றும் வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்யாவும் நடித்துள்ளார். இமான் இசையமைக்க லக்ஷ்மண் இயக்கியிருக்கிறார்.

எனவே மேற்கண்ட இந்தப் படங்கள் வெளியாகும் வரிசையில ஜோதிகாதான் பர்ஸ்ட் வர்றாங்க. நயன்தாரா, ஹன்சிகா எல்லாரும் அப்புறம்தான் வர்றாங்க. (இப்போ டைட்டில் புரிஞ்சிருக்குமே)